Kannadiyan Canal - Article Part -2
- Thanjavur Paramapara
- 3 hours ago
- 2 min read

ஆக., 3 - ஆடிப்பெருக்கு
தண்ணீர் என்ற சொல்லை, தண்+நீர் என்று பிரிப்பர். 'தண்' என்றால், குளுமை. ஆனால், இன்று தண்ணீர் பிரச்சினையை சூடாக்கி வைத்துள்ளனர் அரசியல்வாதிகள். தமிழர், கன்னடர் என்ற பிரிவினையை உண்டாக்கி, காவிரியை வறளச் செய்து புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், புராண காலத்தில், கன்னடர் ஒருவர், தமிழகத்துக்கு தந்த கால்வாய் இன்றும் மக்களுக்கு பலன் தந்து கொண்டிருக்கிறது.
கேரளத்தை ஆண்ட மன்னர் ஒருவர், தன் நோய் நீங்க கர்நாடக பிரம்மச்சாரி பிராமண இளைஞருக்கு, மாணிக்கங்கள் அடங்கிய பதுமையை (பொம்மை) தானமாக அளித்தார். பதுமை, பிரம்மச்சாரியின் கைக்கு வந்ததும் உயிர் பெற்று, தனக்கு அந்த பிரம்மச்சாரி செய்திருந்த காயத்ரி ஜபத்தின் பலனில் ஒரு பகுதியைக் கேட்டது. அப்படி தராவிட்டால், மன்னருக்கு இருந்த வியாதி உன்னை அண்டும் என எச்சரித்தது. பிரம்மச்சாரியும் பயந்து போய் கொடுத்து விட்டான். கொடுத்த பிறகு, அவனது மனம் கஷ்டப்பட்டது.
வியாதியால் அவதிப்படுவோம் என்ற பயத்தில், சுயநலம் கருதி, தர்மத்துக்கு மாறாக, காயத்ரி மந்திரத்தின் பலனை தானம் செய்து விட்டோமே என, மனம் வருந்தி கலங்கினான். இதற்கு பிராயச்சித்தமாக, தனக்கு கிடைத்த மாணிக்கமணிகளை பொதுநலனுக்கு செலவழிக்க முடிவெடுத்து, பொதிகை மலையில் தங்கியிருந்த அகத்தியரிடம் யோசனை கேட்க முடிவெடுத்தான்.
தன்னைச் சந்திக்க ஒரு இளைஞன் வருகிறான் என்பதை அறிந்த அகத்தியர், அவனுக்கு பல சோதனைகளையும், தடைகளையும் கொடுத்தார். அத்தனையையும் மீறி, அவன் அகத்தியரை அடைந்து, 'தன்னிடமுள்ள செல்வத்தைக் கொண்டு, என்ன பணி செய்யலாம்...' என, கேட்டான்.
அகத்தியர் அவனிடம், 'மகனே... தண்ணீர் தானமே மிக உயர்ந்தது. நீ இம்மலையில் இருந்து கீழே இறங்கி செல்லும் போது, வழியில் ஒரு பசுவைக் காண்பாய். அதன் வாலைப் பிடித்துக் கொண்டே செல். அது போகும் வழியைக் குறித்துக் கொள். அந்த வழியாக கால்வாய் வெட்டு. பசு படுக்கும் இடங்களில் ஏரி தோண்டு. ஒரு குறிப்பிட்ட இடத்தில் பசு மறைந்து விடும். அங்கே பெரிய ஏரியைத் தோண்டு...' என்றார்.
இதனிடையே, அகத்தியரே பசுவாக மாறி, அவனுக்கு வழி காட்டி ஒரு இடத்தில் மறைந்து விட்டார். அவர் சென்ற பாதை வழியே கால்வாய் தோண்டினான் கன்னட இளைஞன். இன்றுவரை அவ்விளைஞனின் பெயர் தெரியாவிட்டாலும், அவன் கன்னடன் என்பதால், 'கன்னடன் கால்வாய்' என்று பெயர் வந்தது. நாளடைவில் மருவி, 'கன்னடியன் கால்வாய்' என மாறி விட்டது. திருநெல்வேலி மாவட்டத்தின் மிக நீண்ட பாசனக்கால்வாய் இது. அது முடியும் இடத்தில், 'பிராஞ்சேரி' என்ற ஊர் வந்தது. அங்கே பெரிய குளம் ஒன்றை தோண்டினான்.
கால்வாயில், ஆண்டு முழுவதும் தண்ணீர் வர வேண்டுமே என, கவலைப்பட்டான். அதற்கேற்றாற் போல், மூன்றாண்டுகள் மழை பொழியாமல் கால்வாய் வறண்டு விட்டது. உடனே, அவன் ஒரு விநாயகரை பிரதிஷ்டை செய்து, அவரது உடலில் மிளகை அரைத்து தேய்த்து, அபிஷேகம் செய்து, அப்புனிதநீர் கால்வாய்க்குள் விழும்படி செய்தான். மழை கொட்டித் தீர்த்தது. அந்த விநாயகர், 'மிளகு பிள்ளையார்' எனப் பட்டார். இந்தக்கோவில் சேரன்மகாதேவி என்ற ஊரில் இப்போதும் இருக்கிறது.
கன்னடன் நினைத்திருந்தால், தான் பெற்ற செல்வத்தைக் கொண்டு, அவன் ஊருக்கு ஏதாவது பணி செய்திருக்கலாம். அப்படியில்லாமல், அவன் தான் வந்த பகுதிக்கே நன்மை செய்தான்.
( தொடரும்)..
Source Courtesy: Sri Sethu. Ramachandran (Retd. IAS)
Comments