குடந்தையில் காஞ்சி
- Thanjavur Paramapara
- Nov 30, 2025
- 1 min read
குடந்தை ஸ்ரீஆதிகும்பேச்வர ஸ்வாமி திருக்கோயில் காணப்படும் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் 63ஆவது ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் அவர்களது சிலாரூபம் பற்றி சில குறிப்புகள்
பூஜ்யஸ்ரீ மஹாதேந்த்ர ஸரஸ்வதீ சங்கராசார்ய ஸ்வாமிகள் அவர்கள் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடம் அருள்மரபில் 63ஆவது ஜகத்குரு ஆசார்யர்களாக அருளாட்சி செய்தவர்கள் ஆவர். இவர்களது பூர்வாச்ரம கோத்ரம் மௌன பார்க்கவ கோத்ரம்.
இவர்கள் தமது குருநாதர் ஸித்தியடைந்தபின், (அன்றே) சுபக்ருத் வருஷம் புஷ்ய மாதம் க்ருஷ்ண பக்ஷ த்விதியையன்று, (20th, January, 1783. A.D.) பீடாதிபத்யம் ஏற்றனர்.
பீடாதிபதிகளாகிய சில மாதங்களுக்குள்ளேயே சோபக்ருத் வருஷம் ஆவணி மாதம் 28-ஆவது நாள் செவ்வாய்க்கிழமையும், பூர்ணிமையும் கூடிய நன்னாளில் (10th, September, 1783 A.D.) காஞ்சீ திவ்ய க்ஷேத்ரத்தில் விளங்கும் பகவத்பாதாசார்ய ஸ்வாமிகளின் மடத்தில் ஸ்வாமிபூஜா, தீபாராதனை, ப்ராஹ்மண ஸந்தர்பணை, முதலியவற்றுக்காக, புலவச்சேரி என்ற கிராமம், சிவகங்கை ஸமஸ்தானத்தின் அக்காலத்திய ஸமஸ்தானாதிபதியான விஜய ரகுநாத பெரிய உடையாத் தேவரால் ஸமர்ப்பணம் செய்யப்பட்டது.
பூஜ்யஸ்ரீ மஹாதேவேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் அவர்கள், கும்பகோண க்ஷேத்ரத்தில் நடுநாயகமாக விளங்கும் ஸ்ரீ ஆதிகும்பேச்வரரின் திருக்கோயிலில் ஸோமாஸ்கந்தருக்கு அழகிய தனிக்கோயில் ஒன்றைக் கட்டுவித்தார்கள் என்ற விபரம், ஸ்ரீஆதிகும்பேச்வரரின் ஆலயத்தின் உட்புறமுள்ள ஸோமாஸ்கந்த மண்டபத்தின் அருகேயுள்ள சுவற்றிலும், அதன் அருகிலும் பொரிக்கப்பட்டுள்ள தெலுங்கு மற்றும் ஸம்ஸ்க்ருதக் கல்வெட்டுகளிலிருந்து புலனாகின்றது.
இக்கைங்கர்யம் சாலீவாஹன சகாப்தம 1722 (1801கி.பி.) துன்மதி வருஷத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது: மேலும் பூஜ்யஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் அவர்களின் சிலாமூர்த்தம், இந்த ஸோமாஸ்கந்த மண்டபத்தின் வாயிற்படியில் அஞ்சலி ஹஸ்தத்துடன், நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றது.


Comments