Lessons for everyone from Maha Periyava
- Thanjavur Paramapara
- 17 hours ago
- 1 min read
பையனுக்கு முழு டிக்கட் எடுத்துடு!
ஒருமுறை கும்பகோணத்தில் இருந்து ஒரு டாக்டர் தம்பதி, தங்கள் மகனுடன் மகாபெரியவரைப் பார்க்க காஞ்சிபுரம் வந்து கொண்டிருந்தனர். செங்கல்பட்டு வரை ரயிலில் வந்து, பிறகு வேறு வாகனத்தில் காஞ்சிபுரம் செல்வதாக அவர்களது பயணத்திட்டம் அமைந்திருந்தது.
ரயில் சென்று கொண்டிருந்த போது, டிக்கட் பரிசோதகர் வந்தார். டிக்கட்டை பரிசோதித்த போது டாக்டரின் மகனுக்கு அரை டிக்கெட் எடுத்திருப்பது தெரிய வந்தது. பையனை பார்த்து விட்டு "இவனது உருவத்தை வைத்து பார்த்தால் முழு டிக்கட் அல்லவா எடுத்திருக்க வேண்டும். சரி...மீதி பணத்தைக் கொடுங்கள். டிக்கட் தருகிறேன்,'' என்றார்.
டாக்டர் அதை ஒப்புக்கொள்ள மறுத்து விட்டார். டிக்கெட் பரிசோதகர் எவ்வளவோ வாக்குவாதம் செய்தும், டாக்டர் ஒப்புக்கொள்ளவில்லை. பரிசோதகர் வெறுத்துப் போய் வேறு பெட்டிக்கு போய்விட்டார்.
காஞ்சிபுரத்தில் பெரியவரைத் தரிசிக்க ஏராளமானவர்கள் வரிசையில் நின்றனர்.
டாக்டர் தம்பதியரும் வரிசையில் இணைந்தனர். அவர்கள் முறை வந்ததும், பெரியவரை மரியாதையுடன் தரிசித்தனர்.
"பெரியவா! என் மகனுக்கு உபநயனம் (பூணூல் அணிதல்) செய்யணும்! அதற்கு பெரியவா அனுக்கிரகம் செய்யணும். எந்த தேதியில் உபநயனம் செய்வது என பெரியவா சொன்னால், அதன்படியே செய்து விடுகிறேன்,'' என்றார் டாக்டர்.
பெரியவர் அவரை உற்று நோக்கி விட்டு, "அப்படியா...நீ போய் மடத்து சாஸ்திரியைப் பார். அவர் நாள் குறித்து தருவார். அந்த நாளிலேயே நடத்திடு!'' என்றதும், டாக்டர் பெரியவரை வணங்கி விட்டு நகர முயன்றார்.
அவரை கைகாட்டி நிறுத்திய பெரியவர், "ஊருக்கு கிளம்பும் முன் என்னை வந்து பார்த்துட்டு போ,'' என்றார். டாக்டரும் மகிழ்ச்சியுடன் தலையசைத்து விட்டு சாஸ்திரியைப் பார்க்கச் சென்றார்.
நல்லநாள் குறித்து வாங்கி விட்டு, டாக்டர் குடும்பத்தினர் காமாட்சியம்மன் கோவிலுக்குச் சென்று அம்பாளைத் தரிசித்தனர்.
பின் பெரியவரிடம் வந்த டாக்டர், "பெரியவா...நாள் குறிச்சு வாங்கிட்டேன்,'' என்று சாஸ்திரி குறிப்பிட்டு தந்த நாள் பற்றி தெரிவித்தார்.
அவருக்கு ஆசியளித்து பிரசாதம் தந்த பெரியவர், "அதிருக்கட்டும்...ஊருக்கு போகும் போது, நீ மறக்காமல் ஒன்று செய்ய வேண்டும்... செய்வாயா?'' என்றார் பெரியவர்.
"சொல்லுங்கோ...நீங்க சொல்வதை செய்ய சித்தமாயிருக்கேன்,'' என்ற டாக்டரிடம், "ஒன்றுமில்லே...நீ ஊருக்கு போறச்சே, ரயிலில் உன் பையனுக்கு முழுடிக்கட் எடுத்துண்டு பிரயாணம் பண்ணு. அரசாங்கத்தை ஏமாற்றக் கூடாது. நீ படிச்சு டாக்டராயிருக்கே! நாமளும் அவமானப்படக் கூடாது. ரயில்வே துறைக்கும் உதவி செய்யணும்! புரிஞ்சுதா... நல்லபடியா உபநயனம் நடத்து!'' என்றார்.
ரயிலில் நடந்த விவகாரம் பெரியவரின் ஞானதிருஷ்டிக்கு தெரிந்ததில் ஆச்சரியமில்லை! ஏனெனில், அவர் முக்காலமும் உணர்ந்த ஞானியல்லவா?
Comments