top of page

மாங்கல்யம் அருளும் மகரிஷி-இடையாற்று மங்கலம்

இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது அருள்மிகு மாங்களீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர். இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை. இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் காணப்படுகின்றன.

மகாமண்டபத்தினுள் தெற்கு முகப்பு வழியே உள்ளே நுழைந்ததும் எதிரே அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது. இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள். அன்னை தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் இளநகை தவழும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

மகா மண்டபத்தை அடுத்த அர்த்த மண்டபம் உள்ளது. அதையடுத்து உள்ள கருவறையில் இறைவன் மாங்களீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ் திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இறைவனின் கருவறை தேவக் கோட்டத்தில் தெற்கில் பிச்சாடனர், அர்த்தநாரீஸ்வரர், தட்சிணாமூர்த்தியும், வடக்கில் துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர். திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் சன்னிதி உள்ளது. அந்த சன்னிதியின் இடதுபுறம் மாங்கல்ய மகரிஷியின் திருமேனி உள்ளது. மகரிஷி தனிச்சன்னிதியில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து சுப்பிரமணியர் சன்னிதியும், வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னிதியும் உள்ளது. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்களின் தனிச்சன்னிதி உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயம், அழகான உயரமான திருமதில் சுவற்றுடன் அமைந்திருப்பதே தனி அழகுதான்.

2006-ம் ஆண்டு ஜூன் முதல் நாள் இந்த ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்துள்ளது. இங்கு மேற்கு பிரகாரத்தில் அருள்பாலிக்கும் மாங்கல்ய மகரிஷி இந்த ஊரில் அவதரித்து இங்கேயே சித்தியானவர் எனக் கூறுகின்றனர் பக்தர்கள். இவர் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் திருமணம் செய்து வைத்தவர் என்றும் தல வரலாறு சொல்லப்படுகிறது.

இந்த மாங்கல்ய மகரிஷி கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறார். திருமணமாகாதவர்கள் உத்திர நட்சத்திரத்தில் இந்த மகரிஷிக்கும், இறைவன் இறைவிக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து, சீப்பு, கண்ணாடி, குங்குமம், மஞ்சள், சட்டைத்துணி, பழம், பூ போன்ற மங்கலப்பொருள்களை பெண்களுக்கு தானம் செய்ய வேண்டும். இப்படி வழிபடும் கன்னியரின் கல்யாணக் கனவு பலிக்கிறது. மனதிற்கு பிடித்த மணாளனை அவர்கள் கரம் பற்றுகின்றனர்.

மணமானதும் அவர்கள் தம் கணவருடன் இந்த ஆலயம் வந்து, மாங்கல்ய மகரிஷியை வழிபட்டு சர்க்கரைப் பொங்கல், கேசரி, அக்கார வடிசல் போன்ற இனிப்பு பிரசாதங்களை அவருக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தவிர அந்தக் கன்னியர்கள் தங்களது வேண்டுதல் பலித்து, திருமணம் நிச்சயமாகி, பத்திரிகை அடித்ததும், அந்த முதல் பத்திரிகையை சமர்பிப்பது மாங்கல்ய மகரிஷியின் பாதத்தில்தான்.

இந்த மாங்கல்ய மகரிஷியை வணங்கி பிரார்த்தனை செய்தால், அமைதியான அன்பான கணவனைப் பெண்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறும் இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் - இறைவியை, உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆராதனை செய்து வழிபட்டால் கூடுதல் பலன் கிடைக்கக்கூடும் என்பது ஐதீகம். இதுதவிர இந்த ஆலயத்தில் வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடி வெள்ளி, ஆடிப் பதினெட்டு, ஆடிப்பூரம், நவராத்திரி, விஜய தசமி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, கார்த்திகை, சோமவாரங்கள், கார்த்திகை தீபம், திருவாதிரை, சங்கராந்தி, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும் இறைவிக்கும் விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாசி மகத்தன்றும், பங்குனி உத்திரத்தன்றும் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

அமைவிடம்

திருச்சி - அன்பில் சாலையில் உள்ள லால்குடி பேருந்து நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது இடையாற்று மங்கலம் என்ற தலம்.

Source: Daily Thanthi

75 views0 comments

Recent Posts

See All

தெய்வத்தின் குரலைத் தொகுத்த - ரா. கணபதி அண்ணா படைப்புகள்

அன்புடையீர், நமஸ்காரம் பூஜ்ய மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் ரா. கணபதி அண்ணா என்பதை அனைவரும் அறிவோம். காஞ்சி மடத்தின்...

Comments


bottom of page