முகாமில் பல பக்தர்கள் வந்து "பாத தரிசனம்" கிடைக்குமா என்று மராத்தி மொழியில் வினவினார்கள். வடக்குப் பகுதியில் குருவின் பாதத்தை ஸ்பர்சனம் செய்வது வழக்கம். பாத தரிசனம் குருவின் தரிசனத்திற்கு சமம். குருவின் பாதம் குறிப்பாக வடக்கு மாநிலத்தில் பெரிதாக போற்றப்பட்டு, வணங்கப் படுகிறது.
குருவின் பாதமும், பாதுகையும் நமது பரம்பரையில், சனாதன தர்மத்தின் முக்கிய சின்னம் என்றால் மிகையாகாது.
மாணிக்க வாசகர் அருமையாக கூறுகிறார்,
"உம்பர்கட்கு அரசே! ஒழிவு அற நிறைந்த யோகமே! ஊத்தையேன் தனக்கு
வம்பு எனப் பழுத்து, என் குடி முழுது ஆண்டு, வாழ்வு அற வாழ்வித்த மருந்தே!
செம் பொருள் துணிவே! சீர் உடைக் கழலே! செல்வமே! சிவபெருமானே!
எம்பொருட்டு, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே?".
இறைவனின் பாதத்தை நாம் சிக்கனப் பிடிக்க வேண்டும். இறைவன், சிவன் குருவாக வந்து பாத தீக்ஷை மாணிக்க வாசகருக்கு அருளினார். திருவாசகம் உலகுக்கு கிடைக்க வேண்டும் என்று பாத தீக்ஷை தந்தார் போல் தெரிகிறது.
மஹாபலிக்கு தலை மேல் தனது பாதத்தை வைத்து வாமனன் அருளினார். தான், நான், எனது என்பதை பாதத்தில் அர்ப்பணித்து விட்டால், பாத தரிசனம் கோடி புண்ணியம்.
Comments