ராஜகீழ்பாக்கத்தில் ராஜபோக நவராத்திரி கொண்டாட்டம்
- Thanjavur Paramapara
- Sep 25
- 3 min read
1. அகண்ட பாரத தேசத்தில் ஆ சேது ஹிமாச்சலம் வரையில் அனைத்து சமூகத்தினரும் நவராத்திரி உத்ஸவத்தை ஆண்டு தோறும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
நவராத்திரி ஒன்பது நாட்களும் அன்னை பராசக்திக்கு உரிய நாட்கள். அம்பிகையை, உபவாஸம், சஹஸ்ரநாம ஸ்தோத்திரம், தேவி பாடம் பாராயணம் முதலியவற்றால் பண்டிதர்களும் பாமரர்களும் குறிப்பாக ஸ்த்ரீகள் ஆராதித்து அவரவர் இல்லங்களிலும் சத்சங்கங்களிலும் வழிபட்டு இகபர சுகங்கள் பெறுகின்றனர். மஹாகவி காளிதாஸர், மூக கவி போன்ற மஹாபுருஷர்கள் அம்பாளை தியானித்தும் துதித்தும் அம்பாள் அனுக்ரஹத்தைப் பெற்றுள்ளனர் என்பது நாம் அறிந்ததே.
பல தலைமுறைகளாக, நவராத்திரி தேசம் முழுதும், பல்லோராலும் அவரவர் பாரம்பரிய கலாச்சாரப்படியும் கலைநயத்துடனும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை இல்லத்தில் உள்ளோர் அனைவரது பங்களிப்புடனும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் படிகள் கொண்ட அவரவர் இட வசதிக்கு ஏற்ப கொலு மண்டபம் அமைத்து அழகிய கலை நயம் மிக்க வண்ண வண்ண பொம்மைகளை வைத்து கொலு வைத்துக் கொண்டாடுகின்றனர். தமிழ் நாடு முழுவதும் காஞ்சி காமாட்சி கோவில் உள்ளிட்ட பெரிய மற்றும் சிறிய கோவில்களிலும் நவராத்திரி விழா மிகுந்த கலையம்சங்களுடனும் ஆடல் பாடல்களுடனும் பிரவசனங்களுடனும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
2. நமது ஶ்ரீமடத்தின் தலைமை இடத்திலும் ஶ்ரீ பெரியவா முகாம்களிலும் ஆண்டு தோறும் ஶரண் நவராத்திரி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது நாம் அறிந்ததே. எனினும் இந்த ஆண்டு நவராத்திரி விழா ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரர் பூஜையுடன் ஶ்ரீ ஶ்ரீ பெரியவர்கள் முகாமிட்டிருக்கும், ராஜ கீழ்மாக்கம், ஶ்ரீ மஹா ஸ்வாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் இந்த ஶரண் நவராத்திரி ஶ்ரீ பெரியவர்கள் இருவரும் சங்கல்பித்து நடத்திவரும் பூஜைகள் யாவும் பலவேறு சிறப்பு அம்ஸங்களைக் கொண்டுள்ளன. முதல் சிறப்பு இளைய ஜகத்குரு என்றும் புதுப் பெரியவா என்றும் பக்தர்களால் அழைக்கப்படும், ஶ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸவாமிகள் பட்டத்திற்கு வந்தபின் அவர்கள் பங்கேற்கும் முதல் நவராத்திரி திருவிழா. இரு பெரியவர்களும், தினந்தோறும் இரு வேளைகளிலும் மாறி மாறி விசேஷமாக நவாவரண பூஜை செய்து வருகின்றனர். மிக விஸ்தாரமான பந்தலில் மிகப் பெரிய பூஜை மண்டபம், விழா மேடை என்று அலங்காரத்துடன் கோலஹலமாக பூஜைகள் நடைபெறுவது பக்தர்களுக்கு ஶ்ரீ பெரியவா கருணை மிகுந்து செய்துள்ள மிகப் பெரிய அனுக்ரஹம். அடுத்த சிறப்பு பூஜா மண்டபம் மற்றும் பந்தல்கள் அமைந்துள்ள மனதிற்கு இதமான மகா பெரியவாளையும் புதுப் பெரியவாளையும் நம் நினைவுகளில் நிழலாட வைக்கும் இனிமையான சூழல். ஶ்ரீ காமகோடி பீடாதிபதிகள் ஶ்ரீ மஹாஸ்வாமி மற்றும் பூஜ்யஶ்ரீ புதுப் பெரியவா ஆகியோர் பற்றிய கண்ணுக்கும் கருத்துக்கும் பற்பல சரித்திர உண்மைகளை விளக்கும் கலைநயமும் உயர்ந்த ரசனையும் மிக்க கண்காட்சிக் கூடங்களுக்கு மத்தியில் ஆச்சார்யாளின் சரித்திரங்களை நினைவில் நிறுத்தி நிஜங்களை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்தது மிகப் பெரும் பாக்கியமே. எனவே பக்தர்கள் அனைவரின் பொது நலம் கருதி, 2025 ஆம் ஆண்டு நவராத்திரி விழாவின் சிறப்பு அம்சங்களை விளக்குவோம்:
3. ஶ்ரீ மஹாத்ரிபுர சுந்தரி அம்பா சமேத ஶ்ரீ சந்தரமௌலீஸ்வரர் பூஜைகள் விழாக்கால சிறப்பு பூஜைகளாக காலை மாலை இரு வேளையும் நவாவரண பூஜைகளாக நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சி. இச்சிறப்பு பூஜையின் விசேஷ ப்ரஸாதமாக காலையில் மகிமை மிகுந்த தீர்த்த ப்ரஸாதம் எல்லோருக்கும் வழங்கப் படுகிறது. இதனை பக்தர்கள் நம்பிக்கையுடன் எடுத்துக் கொள்வதால் அவர்களது வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும் என்பதில் ஐயம் இல்லை. மேலும் இச்சிறப்பு பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட மஞ்சள் கிழங்கு பெண்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதன் பலன் என்னவென்றால் அவர்கள் தீர்க சுமங்கலிகளாக சகல சௌபாக்கியங்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ்வர், என்பதாம். மாலையில் அனுஷடிக்கப்படும் நவாவரண பூஜை சற்று நேரமானாலும், இருந்து தரிசிப்போர் அனைவருக்கும், இப் பூஜை ப்ரஸாதமாக தேன் வழங்கப்படுகிறது. இதனை பக்தியுடன் எடுத்துக் கொள்ளும் பக்தர்களின் காமனைகள் அதாவது வேண்டுதல்கள் யாவும் நிறைவேறும்.
4. அடுத்து, விழாக்கால விசேஷமாக உலக அமைதி அனைத்து மக்களுக்கும் சகல ஐஸ்வரயங்களும் கிடைக்க ப்ரார்த்தித்து, தகுதி வாய்ந்த வேத விற்பன்னர்களைக் கொண்டு சங்கல்ப்பிக்கப்பட்ட “ஶத சண்டிஹோமம் மிகுந்த பொருட்செலவில் நடைபெறுகிறது. இதில் பங்களிப்புடன் கலந்து கொள்வோர் தரிஸனம் செய்வோர் என்று அனைவருக்கும் சகல சௌபாக்கியங்களையும் தரவல்லது. சாதாரணமாக நமது இல்லங்களில் தனிப்பட்ட நபர்களாலோ கூட்டாக சத்ஸங்கங்களிலோ இது போன்ற ஶதசண்டி ஹோமங்கள் செய்ய வாய்ப்பில்லை. அத்தகைய மிகப் பெரிதான பலன்களை தர வல்ல ஹோமத்தினை கண்டு களித்து பயன்பெற வேண்டியது, பக்தர்களின் கடமை என்றே கூறலாம். எனவே பக்தர்கள் அனைவரும் தவறாது தினந்தோறும் கலந்து கொண்டு பயன் பெற வேண்டுகிறோம்.
5. இந்த ஆண்டு நவராத்திரி விழாவின் உச்சபட்ச சிறப்பம்ஸம் என்னவென்றால், கன்னிகைகளுக்கு ஏற்படக் கூடிய திருமணத் தடைகள் யாவும் நீங்கிட “ ஶ்ரீ ஸ்வயம்வரா பார்வதி மந்திர ஹோமம். இந்த விசேஷ ஹோமத்திற்கான மூலமந்தரம பன்னூறாயிரம் முறை ஜபிக்கப்பட்டு ஸ்ரீ ஆசார்யாள் அருளிய ப்ரபஞ்சஸார ஸங்க்ரஹத்திலிருந்து ஸ்வயம்வரா பார்வதி ஜப ஹோமப்ரயோகத்தில் இந்த விசேஷ ஹோமம் நடைபெறுகிறது. இந்த ஹோமங்களின் பலனாக, தன, கண, வாஹனாதி ஐஸ்வர்யம், அதிகாரம், ஜனங்களின் ப்ரீதி, புகழ், அழகு, நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படுவதுடன், முக்கியமாக தன்தவத்தினால் உலகிலேயே சிறந்த வரனான ஶங்கரரை அடைந்திட்ட பார்வதி அம்மையின் அருளல், இடையூறுகள் யாவும் விலகி கன்னிகைகள், சிறந்த வரனைப் பெறுவார்கள். கன்னிகைகளுக்கு விவாஹம் நிறைவேறி, சத்ஸந்தானம் உள்பட சகல சௌபாக்கியங்களையும் பெறுவர் என்பது திண்ணம்.
6. இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகள், நமக்காக நமது க்ஷேமத்திற்காக நமது மன அமைதியையும் ஆனந்தத்தையும் வேண்டி, க்ருபை செய்துள்ள மேற்கண்ட விசேஷ ஹோமங்களின் பலன்கள் பூரணமாகக் கிடைத்திட ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட ஆஸ்திக பக்த மஹாஜனங்கள் அனைவரையும் வேண்டுகிறோம். மேலும் ஶ்ரீ மஹாஸ்வாமி வித்தியா மந்திர் பள்ளி வளாகத்தில், கருத்தோவியமாக கண்ணுக்கும் கற்பனைகளுக்கும் விருந்தே என ஏராளமான பொருட் செலவில் பாம்பே ஶங்கர் அவர்களால் அமைக்கப்பட்டதும் ஶ்ரீ புதுப் பெரியவா அவர்களது பொற் கரங்களால் திறந்து வைக்கப்பட்டதுமான, ஶ்ரீ மஹா பெரியவா மண்டபம், ஶ்ரீ காஞ்சி கோஷ், ஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பொற்கரங்களால் திறந்து வைக்கப்பட்ட ஶ்ரீ ஜயேந்திரம் & ஷண்மத அரங்கு, இந்தியர்களின் கலாசார ஒற்றுமைகளை காட்சிப்படுத்தும் அரங்கு, தேச விடுதலைக்கு பாடுபட்ட தேசப் பற்றாளர்கள் சிலைகள், எல்லாவற்றுக்கும் மேலாக தங்கத் தேரோடு உள்ள அன்னை காமாட்சி ஆலயம் என்று அமைந்துள்ள இந்த வளாகத்தை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. இந் நிகழ்சிகள் யாவற்றையும் வார்த்தைகளில் வர்ணிக்கவோ, கவிதையில் வடிக்கவோ நான் ஒரு புலவனாகவோ கவிஞனாகவோ இல்லையே என வருந்தினேன். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து படைத்த பாம்பே ஶங்கர் அவர்கள் வேளை தவறாது, நாவுக்கும் அறுசுவை உணவு படைத்து நம்மை வாயடைத்து நிற்க வைத்து, ஶ்ரீமடம் கைங்கர்யபரர்களின் வரிசையிலும் ஆச்சார்யாள் இதயத்திலும் பெற்றார் என்பதும் நிஜம்.
7. இத்தகைய பெருமை பெற்ற நமக்காக நமது குடும்ப நன்மைக்காக நமது தேச நன்மைக்காக, ஏன் உலகோர் அனைவரது நன்மைக்காக நடைபெறும் இம் மாபெரும் ஆன்மிக விழாவினை நேரில் காண, கண்டு களிக்க, பயன்கள் பலவும் பெற்று களிப்புற்று வாழ, முதியோர் வாலிபர், இளைஞர்கள் என்று குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடனும் மாணவ மாணவியருடனும் வருக வருக, வந்து குருவருளும் திருவருளும் ஒருசேர பெறுக என வரவேற்கிறோம்.
ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர.





Comments