ஜகத்குரு பூஜ்யஶ்ரீ பெரியவா, நாள்தோறும் வேளை தவறாது செய்கின்ற தமது உயர்நிலை அனுஷ்டானங்களுக்கு இடையேயும், தம்மை காண வருகின்ற பக்தர்களுக்கு நீண்ட நேரம் தரிஸனம் தந்து ஒவ்வொருவரிடமும் அவர்கள் மன நிறைவு பெறும் வகையில் நீண்ட நேரம் உரையாடியும் ஶ்ரீ சந்திரமெளலீஸ்வரர் பூஜை முடித்துக் கொண்டும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது, கங்கை, சரயூ போன்ற புண்ணிய நதிக் கரைகளுக்கு பக்தர் குழாம் சூழ தீர்த்தாமாட செல்வதும் உண்டு. அப்படித்தான் இன்று 14.10.2023 சனிக் கிழமை சந்திரமெளலீஸ்வழருக்கு இரு கால பூஜைகளை முடித்துக் கொண்டு பகல் சுமார் 12 மணிக்கு சரயூ நதிக்கு புறப்பட அயத்தமானது கண்டு அடியேனும் உடன் பாராயணத்திற்கு வந்துள்ள நண்பர்கள் ஶ்ரீ முரளி மோகன்
மற்றும் ஶ்ரீ முடிகொண்டான் டாக். சுந்தர் ராமன் ஆகிய இருவரும வந்தனர். ஏதோ ஒரு வண்டியில் தொற்றிக் கொள்ள அங்குமிங்கும் அலைந்த என்மீது ஶ்ரீ பெரிவாளின் கடாக்ஷம் பட்ட அந்த நொடியே, என்னை தான் செல்லும் வண்டியில் ஏற்றிக் கொண்டு க்ருபை செய்து ஶ்ரீமத்இராமாயணம் புத்தகத்தையும் கொண்டு வரச் சொன்னார்கள். சரயூ நதிபற்றி வருகின்ற ஸ்லோகங்களை எடுத்து வைத்துக் கொள்ளச் சொன்னார்கள். பத்து நிமிடங்களில் சரயூ தீரத்தை அடைந்ததும், என்னை அழைத்து, இராமாயணத்தில் “ சரயூ பற்றி வருகிற ஸ்லோகங்களை வாசிக்கச் சொன்னார்கள். தஶரத சக்ரவர்த்தி புத்திர காமேஷ்டி யாகம் செய்திட சரயூ நதிக் கரையில் ஏற்பாடுகள் செய்கின்ற கட்டம் தொடங்கி வாசிக்க, ஒவ்வொரு ஸ்லோகத்தின் பதபதார்த்தங்களை தாமே சொல்லி விளக்கி ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து அனுபவித்தார்கள். ஶ்ரீபெரயவா தலை சிறந்த ரஸிகர் அல்லவா? அதிலும் குறிப்பாக, அயோத்தியில் ஷடங்க வேத பண்டிதர்கள் இருந்தது பற்றிய குறிப்பை சொல்லி சொல்லி ரஸித்தார்கள். இந்த இடத்தில் வட தேசங்களில் நதிகளை அனைத்து ஜனங்களும் கொண்டாடி மகிழ்ந்து பயன்கள் பெறுவதுபோல் தமிழ் நாட்டில் காவிரி, தாமிரபரணி பெண்ணை போன்ற நதிகளைக் கொண்டாடினால் தமிழ்நாட்டில் நீர்வளம் பெருகி தேசம் செழிப்புறுமே என்பது ஶ்ரீ பெரியவாளின் கருத்து. எனவேதான் காவேரி தாமிரபரணி புஷ்கர விழாக்களை மிக சிறப்பாக கொண்டாட நடவடிக்கைகளை தாமே முன் நின்று நடத்தி அருளினார்கள் என்பது இங்கு புறிப்பிடத் தக்கது. ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து அனைத்து ஜனங்களும்/ உயிரினங்களும் நலமுடன் வாழ அல்லும் பகலும் அயராது உழைக்கும் தவ வாழ்க்கையை மேற்கொண்டுள்ள ஶ்ரீகாஞ்சி காமகோடி ஜகத்குரு பூஜ்யஶ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்களுக்கு நாம் சாஷ்டாங்க நமஸ்காரங்களை சமர்ப்பித்து நமது க்ருதக்ஞையை தெரிவித்துக் கொள்வோம்.
- சேது. ராமச்சந்திரன் I. A. S(R)
Comments