top of page

SriGurupada Renu

Pranams to PujyaSri Periyava. In commemoration of Inaugural function of Three day National Seminar on the occasion of 2500th Siddhi-Day of

SriAdi SankaraBhagavatpadacarya

At Siddhi-Sthal Kancheepuram, in the August presence of Jagadguru PujyaSri Sankara Vijayendra Saraswathi Swamigal,

with Thiru.R.N.Ravi Hon’ble Governor of TamilNadu, as Chief Guest in the SCSVMV University, Enathur, we are proud to humbly present a write up posted below by "SriGurupada Renu” in our domain, www.thanjavurparampara.com a


1.ஸ்ரீ சங்கரரின் தோற்றமும் சன்யாசாஸ்ரமும்: நமது பாரத தேசத்தின் பாரம்பரியம் என்பது மகத்தான தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது. மனித சமூகத்தினர் அனைவரது, தடைகளற்ற நலமான வாழ்க்கைக்கு அடிப்படையும் தர்மமே. இந்த உலகம் தர்மத்தின் ஆதாரத்தில்தான் இயங்குகிறது. “தர்ம சாரம் இதம் ஜகத்” என்கிறது ஸ்ரீமத் ராமாயணம்.  தர்ம வழியில் ஈடுபட்டுள்ள மக்களைக் கொண்டுதான் நமது பாரம்பரியமும் கலாசாரமும் நிர்ணயிக்கப்படுகிறது. உலகம் சுமுகமாக செயல்பட நிரந்தரமான விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவற்றைத் தான் 'தர்மம்'என்று சொல்கிறோம். இத்தகைய தர்மத்திற்கு, அவ்வப்போது தீங்குகள்ஏற்படும்போது, பகவான், கீதையில் வாக்களித்தது போல, தானே அவதரித்தோ, அல்லது  தனது அம்ஸங்களில் ஒன்றை இப் பூவுலகில் பிறக்கச் செய்தோ, மனித குல நலத்திற்கான தர்மத்தை நிலை நாட்டுகிறார். அவ்வாறுதான், சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர், இத்தேசத்தில், 70க்கும் மேற்பட்ட துர்வாதி மதங்கள் தலைப்பட்ட காலத்தில், சாக்ஷாத் ஸ்ரீ பரமசிவனின் அவதாரமாக ஸ்ரீமத் ஆதிசங்கர பகவத்பாதர், தோன்றி, துர்வாதி மதங்களைக், கண்டித்து அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும், உலகம் முழுதும் உள்ள பன்னூற்று அறிஞர்களாலும் போற்றி ஏற்றுக் கொள்ளப்பட்ட, இன்றும் ஏற்கப்படுகின்ற, ‘அத்வைத’ (இரண்டற்ற) சித்தாந்தந்தத்தை நிலை நாட்டினார்கள். ஸ்ரீமத் பகவத்பாதர், இப்பூவுலகில் வாழ்ந்திட்ட , (பொ.ஆ. 509-476) மிகக் குறுகிய காலத்தில், அறத்திற்கும் அறத்தின் அடிப்படையில் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் கொண்ட ஆன்மிகத்திற்கும் செய்திட்ட தொண்டுகளும் சாதனைகளும் ஏராளம். அவதார புருஷரும் பேரறிவாளருமான ஸ்ரீ சங்கரர், வேத நெறியை நிலை நாட்டி,  ஆறு வகை வழிபாட்டு முறைகளை ஸ்தாபித்தார். மேலும், அத்வைத சித்தாந்தத்தை அகிலம் முழுதும் அனைத்து மக்களும் பின் பற்றிட பாரதத்தின் நான்கு திசைகளிலும் மடங்களை ஸ்தாபித்தார். கடைசியாக, ஸ்ரீ காஞ்சியில் சர்வக்ஞ பீடமான காமகோடி பீடத்தினை நிறுவி, தானே அதன் முதல் பீடாதிபதியாகவும் இருந்து, இந்து தர்மத்தை நிலை நாட்டினார் என்பதும் வரலாறு. ஸ்ரீமத் ஆதி சங்கர பகவத்பாதர்களே நமது ஆதிகுரு. பெருமைகள் பலகொண்ட ஞானவானாகிய நம் ஆதிகுருவினை போற்றும் வகையில் அவர்களது சாதனைகள் சிலவற்றை, புனித தினமான தீபாவளித் திருநாளில் இங்கே நினைவு கூறி அவருக்கு நம் நன்றிகளைத் தெரிவிப்பதுடன் அடுத்தடுத்த தலைமுறைகளின் மேன்மைக்காக ஆதி குருவின் பெருமைகளை பதிவிடுவதும் நமது தலையாய கடமையும் நோக்கமுமாகும்.

2. நம் அனைவருக்கும் நன்கு பாடமான, “குருர் பிரம்மா” எனத் தொடங்கும் பாடலின் பொருள்,  “குருவே தெய்வம். குருவே பிரம்மா. குருவே விஷ்ணு. குருவே மகேசுவரன். குருவே தேவர்கள். குருவே ஸாக்ஷாத் பரப்பிரம்மம்”, என்பதாம். இது முற்றும் உண்மை. ஸ்தோத்திரத்துக்காகச் சொல்லப்பட்டதல்ல இது. குருவை உள்ளன்போடு பூஜித்தால் சிவ-விஷ்ணு பேதம் இல்லாமல் எல்லோரையும் பூஜித்ததாகிறது என்பதும் உண்மை. “எழுத்தறிவித்தன் இறைவன்” ஆகும், என்பது ஆன்றோர் வாக்கு. ஆக, நமக்கு எண்ணும் எழுத்தும் கற்பித்த ஆசிரியர் தொடங்கி அடுத்தடுத்து மேல் நிலை உயர் நிலை என்று தொடர்ந்து வாழ்வியல், பொருளியல் என பல்பிரிவு கல்வியைகளைக் கற்பிப்பவர்கள் அனைவரும் குருமார்களே. எனினும், மனித வழ்க்கையின் தத்துவங்களை, பிரபஞ்சத்தின் ரகசியங்களை கற்றுத் தெளிந்து, கற்றவறைக் கடைபிடித்து, உலக வாழ்க்கையினை தியாகம் செய்து, தியாக சீலராக வாழ்ந்து உன்னத நிலையாம் “ இறைத்தன்மையை” அடைந்தும், அந்த மேம்பட்ட நிலையினையை எல்லா மக்களும் அடைந்திட வழிகாட்டி, நம் அனைவருள்ளேயும் உறைந்தும் மறைந்தும் இருக்கும் பரம்பொருளை நமக்குக் காண்பித்துக் கொடுக்கும் ஆன்மிகக் குருவே,” உத்தம குரு”.    அறிவுக் கண் திறக்கும் ஆன்மிகக் குருமார்கள் பலருண்டு. ஆனாலும், “அத்வைதம்” எனும் உயர்ந்த  சித்தாந்தத்தை நமக்கு அருளிய ஸ்ரீ சங்கரர் ஆதிகுருவாகிறார். பாரதத்தின் தென் கோடியில், காலடி எனும் ஊரில் புத்திரப்  பேறு வேண்டி, சிவபெருமானை நோக்கி தவமிருந்த சிவகுரு-ஆர்யாம்பா தம்பதிக்கு, பொ.ஆ.509ல் ஸ்ரீ சங்கரர் அவதரித்தார்.  ஐந்து வயதில் உபநயனம் செய்விக்கப் பட்டு, வேதம் கற்க பாடசாலைக்கு அனுப்பட்ட, சிறுவன் ஸ்ரீ சங்கரன்,  பிரும்மச்சர்ய வாழ்க்கை முறைப்படி,“பிக்ஷை” எடுக்க ஒரு வீட்டிற்குச் சென்றார். வறுமையின் பிடியிலிருந்த அந்த வீட்டுப் பெண்மணிக்கு, “காந்தம் போல் கவர்ந்து இழுக்கும்” இச் சிறுவனுக்கு பிக்ஷை இட வீட்டில் ஏதுமில்லாத நிலையில், தான் வைத்திருந்த, வாடின ஒரு நெல்லிக்கனியை, அவரது பிக்ஷைப் பாத்திரத்தில் இட்டாள். அவளது வறிய நிலை கண்டு வருந்திய சங்கரர், இந்த அன்னைக்கு அவளது வறுமையை போக்கும் அளவில் வேண்டிய பொன் அளிக்குமாறு செவ்வத்துக்கு அதிபதியான,  ஸ்ரீ மஹா லக்ஷிமியை வேண்டிப் பாட, இவரது வேண்டுகோளை ஏற்ற அன்னை, அந்த இல்லத்தில் தங்க நெல்லிக் கனிகளை பொழிந்துவிட்டார்.  இதுவே, ”கனகதாரா ஸ்தோத்திரம்” எனும், ஸ்ரீ சங்கரரின் முதல் துதிபாடல்.  

3. கல்வியும் காசி யாத்திரையும். எட்டு வயதிலேயே வேதம் அனைத்தையும் கற்றுத் தெளிந்து, பெற்ற தாயான ஆர்யாம்பாளிடம், மிகச் சாமர்த்தியமாக பேசி அவரது அனுமதியுடன் சன்யாசாஸ்ரமம் மேற்கொண்ட ஸ்ரீசங்கரர், பற்பல இடங்களில், தமது குருவைத் தேடினார். இறுதியாக, நர்மதைக் கரையில், தான் தேடி வந்த குரு ஒரு குகையில் இருப்பதைக் கண்டறிந்தார்.  என்னதான் அவதார புருஷரென்றாலும், ஸ்ரீ சங்கரரும் முறைப்படி ஞான தீக்ஷை பெற உத்தம குரு  ஒருவர் வேண்டுமல்லவா? குகையின் வெளியே நின்றுகொண்டு, குரு, கோவிந்த பகவத்பாதரிடம் குகையின் உள்ளே வர அனுமதி  வேண்டினார், ஸ்ரீசங்கரர். ஸ்ரீ கெளடபாதரின் சிஷ்யரான      ஸ்ரீ கோவிந்த பகவத்பாதர், ஸ்ரீ சங்கரரிடம், சில கேள்விகளைக் கேட்க, அற்புதமாய், “சிவகேவலோகம்” எனும் வார்த்தையோடு முடிகின்ற பத்து பாடல்களில், ஸ்ரீ சங்கரர் அளித்த பதிலே, பிற்பாடு “தச ஸ்லோகி” என்றாயிற்று. பதிலுரைகளைக் கேட்டதும் ஆச்சர்யம் அடைந்த குரு கோவிந்தபாதர் வெளியே வர, குருவின் தெய்வீக சாந்நித்தியத்தைக் கண்டு உளம் பூரித்து இவரே தாம் தேடி வந்த குரு என அறிந்து அவரது பொற்பாதங்களில் விழுந்து வணங்கி தம்மை சிஷ்யனாக ஏற்க வேண்டினார். உடன் கோவிந்த பகவத்பாதரும், மிகுந்த மகிழ்சியுடன் அவரை சிஷ்யராக ஏற்றார்.      ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் தமது குருவோடு தங்கி இருந்து பன்னூல்களையும் கற்றுத் தெளிந்தார், ஸ்ரீ சங்கரர். பின்னர் குருவின் ஆணைப்படி, அத்வைத சித்தாந்தத்தினை ஸ்தாபிதம் செய்திட, கல்வியில் கரை கண்ட கல்விமான்கள் நிறைந்ததும், பல்கலைக் கல்வி கேந்திரமானதும்  புனித நதியாம் கங்கை கரையில் உள்ளதுமான காசி எனும் வாராணசிக்கு விந்திய மலையைத் தாண்டி பல நாட்கள் நடந்து  சென்றார். அங்குதான் பல ஞானவான்களைச் சந்தித்து, வாதில் பலரை வென்று தனது, அத்வைத சித்தாந்தத்தை நிறுவினார். அவருக்கு சனந்தர் எனும் உன்னத சிஷ்யரும் கிடைத்தார். காசியில் இருக்கும்போது, வேத வியாசரின் ப்ரும்ம சூத்திரத்திற்கும், விஷ்ணு சஹஸ்ரநாமத்திற்கும் உபனிஷதங்களுக்கும் பகவத் கீதைக்கும் விரிவுரைகள் எழுதினார், ஸ்ரீ சங்கரர். வேத வியாஸர், ஒரு வயோதிகர் வேடம் பூண்டு, ஸ்ரீ சங்கரரிடம், அவரது, ப்ரும்ம சூத்திர விரிவுரை பற்றி வாதப் பிரதிவாதங்களில் ஈடுபட, பல நாட்கள் விவாதம் தொடர்ந்தது. இடையில், ஒரு சில வார்த்தைகளில் கிடைத்த குறிப்புகளைக் கொண்டு, அந்த வயோதிகரே பகவான் வேத வ்யாஸர் என அறிந்தவராய், அவருக்கு வந்தனங்களை ஸ்ரீ சங்கரர் தெரிவிக்க, அவரது வாதங்களில் மிக்க மக்ழ்ச்சி அடைந்த பகவான் ஸ்ரீ வேத சியாஸர், ஸ்ரீ சங்கரரின் ஆயுளை நீட்டித்து அருளினார். காசி நகரில்தான், சண்டாளன் உருவத்தில் தலயில் கள்ளு குடத்துடனும் உடன் நான்கு நாய்களுடனும் ஸ்ரீ சங்கரரின் பாதையில் பரமசிவன் வர, சண்டாளனை ஒதுங்கச் சொன்னார் ஸ்ரீ சங்கரர். “ எதை ஒதுங்கச் சொல்கிறாய், உருவத்தையா, என்னுள் இருக்கும் சைதன்யத்தையா” எனக் கேட்க, ஸ்ரீ சங்கரர் அறிந்து கொண்டார், வந்திருப்பது யார் என்றும் அவரது கேள்வியின் உண்மைத் தன்மையையும், வேதாந்தத்தின் உயர்நிலைக் கருத்துக்களையும். உடன் சங்கரர் அளித்த பதிலே அற்புதமான,”மானிஷ பஞ்சகம்”.  இக் காசி மாநகரத்தில்தான், எளியமுறையில் பக்தி பாவத்துடன் இறைவன் நாமத்தை பாடியே, எளியோரும் பிறவிப் பெரும் கடலை கடக்கலாம் என்ற அறிவுரையுடன் கூடிய, பிரசித்தி பெற்ற, மோக முத்கரம் எனும்,  “பஜ கோவிந்தம்” எனும் பாடலை ஸ்ரீ சங்கரர் பாடி அருளினார்.  நூற்றுக் கணக்கான சிஷ்யர்கள் உடன் வர, காசி நகரத்திலிருந்து தனது பாரத தேச யாத்திரையை ஸ்ரீ சங்கரர் தொடங்கியபோது, காசி மஹாராஜா முதல் அறிஞர்கள் சான்றோர்கள், கல்விமான்கள் என்று ஏராளமானவர்கள் ஸ்ரீ சங்கரருக்குத் தலை வணங்கி வழி அனுப்பி வைத்தார்கள்.

4. ஸ்ரீசங்கரரின் பாரத தேச பாத யாத்திரரை:  ஸ்ரீ சங்கரரின் திக் விஜயம் எனும் பாரதம் முழுவதற்குமான யாத்திரை, வடக்கே ப்ரயாக் ராஜ் தொடங்கி, பத்ரிநாத், காஷ்மிர், நேபாளம் வரையிலும், மேற்கே துவாரகா உள்ளிட்ட பல நகரங்களுக்கும் மேற்கே பூரி ஜகன்நாதம், தெற்கே சிதம்பரம் , ஜம்புகேஸ்வரம், ராமேஸ்வரம் என்று 12 ஜ்யோதிர் லிங்கங்கள் தரிஸனம் உட்பட பற்பல க்ஷேத்திரங்கள் தீர்தங்கள் என்று அவரது         திக் விஜய யாத்திரை நீண்ட ஒன்று. இந்த திக் விஜயத்தின் போது, திருவானைக் கோவிலில், அன்னை அகிலாண்டேஸ்வரியின் உக்கிர ஸுரூபத்தை தணிக்கும் வகையில் அன்னையின் தாடங்கத்தில் ஸ்ரீ சக்ர யந்திரத்தை ஸ்தாபித்தார். மேலும் அம்மனின் சன்னதிக்கு நேர் எதிரில் பெரிய விநாயகர் சிலையை நிறுவி அம்மனை சாந்த ஸுரூபியாக ஆக்கி பொதுமக்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்ற வகையில் மாற்றித் தந்தார். மேற் சொன்ன அம்மனின் தாடங்கங்கள் பழுதுறும் போது அதனை நேர் செய்யும் புனிதப் பணி, ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட குருமார்கள் பரம்பரையைச்  சார்ந்ததாக உள்ளது. இத்திருப்பணியை ஸ்ரீ காஞ்சி சங்கராச்சார்யர்களும் காலம் தோறும் செய்து வருகிறார்கள். பாரத தேச யாத்திரையின் பொழுதுதான் திருப்பதி, பூரி ஜகன்நாதம்  உட்பட பல கோவில்களில் பூஜைக்கான நெறி முறைகளை வகுத்துத் தந்தார்.  ஸ்ரீ சங்கரரின் நெடிய  திக் விஜயம் பற்றி அவரது திவ்ய சரித்திரத்தில் விரிவாகக் காணலாம். ஸ்ரீ சங்கரர் திக் விஜயத்தில் இருந்த போது தன்னைப் பெற்ற அன்னை அந்திம காலத்தில் இருப்பதை உணர்ந்தார். உடன் அவருக்கு வாக்களித்தபடி, தன் யோக சக்தியினால் தம் அன்னை இருக்கும் இடம் சென்று, அன்னை வேண்டியவாறு, அவருக்கு, இறைவனின் தரிசனம் செய்வித்து ,அவர் காலகதி அடைந்ததும், அவருக்கு மகனாக இருந்து செய்ய வேண்டிய இறுதிக் கடன்களை செய்தார். அப்பொழுது, ஒரு அன்னையின் ஈடு இணையற்ற பெருமைகளைக் கூறி பாடினார். அதுவே, அன்னைகளின் பெருமை கூறும்” மாத்ரு பஞ்சகம்” எனும் அற்புத பாடல். பன்மொழிகள் பேசும் பல்வகைக் கலை மற்றும் கலாச்சாரங்களைக் கொண்ட மக்கள் நிறைந்துள்ள  அகண்ட பாரத தேசத்தினை ஒன்றிணைக்கும் சக்தியாக இருப்பது, பாரம்பரிம் மிக்க நமது தர்மம் தான். “வேற்றுமையில் ஒற்றுமை” எனும் பண்பை வலியுறுத்தி வளரச் செய்யும் ஆற்றல் ஆன்மிகத்திற்கு உண்டு என நிரூபித்துக் காட்டிய மகான், ஸ்ரீ ஆதி சங்கரர். சரித்திர ஆசிரியர்கள் கூற்றுப்படி,“தேச ஒற்றுமையின்” அடையாளமாக (ICON.) ஸ்ரீமத்ஆதி சங்கரர் விளங்குகிறார்.

5. ஸ்ரீ சங்கரரின் கைலாச யாத்திரை: வடக்கே இமயமலை அடிவாரங்களில் பயணித்தபோது, கைலாசம் சென்று சிவனையும் பார்வதி தேவியையும் தரிசிக்க, ஸ்ரீ சங்கரர் தமது யோக பலத்தினால் கைலாச பர்வதம் சென்று,       சிவ-பார்வதியை தரிசித்து, சிவ பாதாதி கேசம் மற்றும் சிவ கேசாதி பாதம் எனும்  சிவ வர்ணனைப் பாடல்களைப் பாடினார். உளம் பூரித்த சிவ பெருமான், ஸ்ரீ சங்கரரிடம் ஐந்து ஸ்படிக லிங்கங்களை வழங்கி அவற்றை பூஜிக்கும் முறைகளையும் கற்பித்தார். அவ்வைந்து ஸ்படிக லிங்கங்களில் ஒன்றான “யோக லிங்கமே”, தொடர்ந்து, ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதிகளல், நாள் தோறும் மூன்று வேளையும் பூஜிக்கப்பட்டு வருகிறது. மேலும் சிவபெருமான் பராசக்தியினை புகழ்ந்து தானே இயற்றிய பக்திப் பாடல் அடங்கிய ஓலைச் சுவடிகளை அளித்தார். அதுவே,” செளந்தர்ய லஹரி” எனும் அற்புத ஸ்தோத்திரப் பாடல்.

6. ஸ்ரீ சங்கரர் காஞ்சியில் சவர்வக்ஞ பீடம் ஏறுதல்: பாரத தேச யாத்திரையை முடித்துக் கொண்டு காஞ்சி திரும்பிய ஸ்ரீ சங்கரருக்கு அபோது காஞ்சியை ஆண்ட அரசன், ராஜசேனா முதல் பாமரன் ஈராக பெரும் திரளான மக்கள் வரவேற்பு அளித்தனர். காஞ்சி நகரில் உள்ள புராணத் தொடர்புகள் உள்ள மிகப் பழமையான கோவில்களான காமாட்சி ஆலயம், ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலயம் போன்ற கோவில்களை சீரமைத்து திருப்பணிகள் செய்திட்டார். அதுபோலவே, ஸ்ரீ காமாட்சி அம்மனின் உக்கிர ஸ்வரூப்பத்தை தணித்து, கருணை மிக்க  அன்னையாக, பக்தர்கள் தரிசிக்கும்  வகையில் அம்மனுக்கு முன்னர் ஸ்ரீ சக்ர யந்திரத்தினை பிரதிஷ்டை செய்திட்டார்.ஸ்ரீ சங்கரர், சிவ விஷ்ணு பேதம் பாராது அனைத்து உபாஸனா மூர்த்திகள் மற்றும் தெய்வங்கள் மீதும் ஏராளமான பாடல்களை எளிய பாமர மக்களும் பாடிப் பயன்பெறும் வகையில்அருளியுள்ளார். மேலும், “ப்ரஸ்னோத்திர ரத்தின மாலிகா” எனும், கேள்வி-பதில்கள் கொண்ட ஒரு அருமையான சிறு நூலில் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் தர்மம் பற்றிய விளக்கங்கள் தந்துள்ளார். முக்தி தரும் ஏழு க்ஷேத்திரங்களுள்,  தென்னகத்தில் உள்ள ஒன்றே ஆன காஞ்சி நகரத்தில் சர்வக்ஞ பீடமேறி தாமே அதன் முதல் பீடாதிபதியாக்வும் அமர்ந்து மக்களுக்கு நல்லாசி வழங்கிய ஸ்ரீ சங்கரர், கல்விமான்கள் சாஸ்திர சம்ப்ரதாயங்களைக் கற்றுத்தெளிந்த பண்டிதர்கள் முதலியோர் மத்தியில் உரையாடுவதும் அவர்களின் அறிவாற்றலை பெருக்கும் விதமாக எழுப்பப்டும் கேள்விகளுக்கு சரியான ஆதாரபூர்வமான பதிலளிப்பதும் வழக்கம். இது போன்ற கூட்டத்தில், ஒருமுறை, தெற்கே தாமிரபரணி ஆற்றங்கரைப் பகுதியிலிருந்து வந்திருந்த ஒரு சிறுவன்அபார புத்தி கூர்மையுடன் கேட்ட கேள்விகள் ஸ்ரீ சங்கரரை ஆச்சர்யப்படுத்தின. ஸ்ரீ சங்கரர், அச்சிறுவனே தனக்குப்பின் ஸ்ரீகாமகோடி பீடத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்க வல்லவர் எனத் தீர்மானித்து, “சர்வக்ஞாத்மர்” எனும் தீக்ஷா நாமம் தந்து, சர்வக்ஞ பீடத்திற்குத் தனது வாரிசாக்கினார். அது முதல் இடைவெளி இல்லாது, கல்வி கேள்விகளில் தலை சிறந்த ஞானவான்களும், மஹான்களும் இப் பீடத்தினை அலங்கரித்து வருகிறார்கள்.  ரஸவேதி என ஒரு மூலிகை உண்டென்றும் அந்த மூலிகை இரும்பை பொன் ஆக்க வல்லது என்றும் ஆனால் அம்மூலிகையினால் பொன்னாக்கப்பட்ட இரும்பைக் கொண்டு மற்றொன்றை தங்கமாக்க முடியாது என்றும் கூறுவார்கள். ஆனால் ஒரு உத்தம குரு தனது சிஷ்யனுக்கு தான் கற்றறிந்த அனைத்து கலைகளையும் அனுபவங்களையும் கற்பித்து தன்னிலும் மேம்பட்டவனாக ஆக்க வல்லவர். அந்த சிஷ்யனும் தன்னிலும் மேம்பட்டவனாக மற்றொரு வாரிசை உருவாக்குவதில் தீவிரமாவார்.   ஒரு தீபத்திலிருந்து இன்னொரு தீபம் ஏற்றுவது அதிலிருந்து மற்றொன்று என தீபங்களின் வரிசை போல் ஞானதீபம் தொடர்ந்து வந்துகொண்டே இருப்பது இப் பீட குருமார்களின் பெருமை. மேலும் பரமசிவனின் அவதாரமாக ஆதி சங்கரர் தோன்றினார் என்றோம். தொடர்ந்து காமகோடி பீடத்தினை அலங்கரிக்கும் சங்கராச்சார்யர்கள் ஒவ்வொவரும் ஸ்ரீஆதி சங்கரரின் அவதாரம் என்பதே இம்மடத்தின் ஐதீகமும் பக்தர்களின் நம்பிக்கையுமாகும்.  

7. குரு வந்தனம்: “ப்ரஸ்னோத்திர மாலிகா” நூலில் உள்ளவாறு, குரு வாக்கியத்தை நாம் அனைவரும், முழுமையாக ஏற்க வேண்டும். தர்மத்தை ஒருபோதும் கை விடலாகாது. “எதைச் செய்யக்கூடாது” என தர்மம் விலக்குகிறதோ அவற்றை  செய்யாதிருந்தும். “எவற்றைச் செய்ய வேண்டும்” என தர்மம் வலியுறுத்துகிறதோ அவற்றைச் செய்தும், அஹிம்ஸை, பரஸ்பர அன்பு முதலியவை கொண்ட வாழ்வியல் தர்மத்தை கடைபிடித்து,  ஒட்டுமொத்த சமுதாயமும் இன்புற்று ஒற்றுமையுடன் வாழவும், அனைத்து மக்கள் முன்னேற்றத்திற்கும் நம்மாலான உதவிகளை செய்வோமாக.  

 “அகண்ட மண்டலாகாரம்” எனத் தொடங்கும் குரு துதியின், பொருள், “ பரந்த உலகனைத்தும் நிறைந்துள்ள, அசையும் அசையா, அந் நிலையில், அத் தோற்றத்தில் உள்ள அந்த மரியாதைகுரிய குருவை வணங்குகிறேன். அக்ஞான இருளில் குருடான கண்ணுக்கு ஞானமையை தீட்டி கண்களைத் திறந்து வைத்த மரியாதைக்குறிய குருவை வணங்குகிறேன்”, என்பதாம். எனவே, ஆதி குருவான ஸ்ரீசங்கர பகவத்பாதரின் அருமை பெருமைகளை உணர்ந்து, அவர்களை நாள்தோறும் வணங்கித் தொழுது இக பர சுகங்களைப் பெறுவோமாக.   

2500th Siddhi-Day Celebrations of Sri Adi Sankara





45 views0 comments

Comments


bottom of page