top of page

தண்டலைச்சேரி ஶ்ரீ நீள்நெறிநாதர் திருக்கோவில்

Thandalaichery Sri Neelnerinathar

This Thevaram temple is most ancient. It is nearly 62 KM from Kumbakonam and 24 KM from Thiruvarur.(on the Kumbakonam-Tiruvarur-Tiruthuraipoondi highway).

Courtesy: Sri. N. Swaminathan, No. 25, Agraharam, Thepperumanallur-612204, Kumbakonam.


தண்டலைச்சேரி ஶ்ரீ நீள்நெறிநாதர் திருக்கோவில்:-

சுவாமியின் திருப்பெயர் : ஸ்திரபுத்தீஸ்வரர், நீள்நெறி நாதர்.

அம்பாளின் திருப்பெயர் : ஞானாம்பிகை.

தல மரம் : குருந்தை

தீர்த்தம் : ஓமக தீர்த்தம் (ஞானசித்தி விநாயகர் கோயிலின் எதிரில் நீராடல் சிறப்புடையது.)

வழிபட்டோர் : வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோர்.

திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பாடிய திருத்தலம்.


தல வரலாறு:


இத்தல இறைவனுக்குத்தான் அரிவாட்டாய நாயனார் என்பவர் தினந்தோறும் செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் படைத்து வந்தார்; இவ்விறைவனே நாயனாருக்கு முக்தி கொடுத்தருளியவர். மக்கள் தற்போது 'தண்டலைச்சேரி ' என்றும் 'தண்டலச்சேரி ' என்றும் வழங்குகின்றனர். கோயில் பெயர் - நீள் நெறி; ஊர் தண்டலை ஆகும். வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர் ஆகியோர் வழிபட்டு சிறப்பெய்தினர். தண்டலை என்பது இக்காலம் தண்டலைச்சேரி என வழங்கப் பெறுகின்றது. தேவாரம் பாடப்பெற்ற காலத்தில் ஊரின் பெயர் தண்டலை. இங்குள்ள கோயிலின் பெயர் நீள்நெறி. கோச்செங்கட் சோழன் தனது முன்பிறவியில் யானையினால் ஏற்பட்ட இடர் காரணமாக, யானை ஏறாத, ஏறமுடியாத மாடக் கோவில்கள் 70 கட்டினான் என்று வரலாறு கூறுகிறது. அத்தகைய ஆலயங்களில் திருத்தண்டலைநீள்நெறி கோவிலும் ஒன்றாகும். இந்த பழமையான சிவன் கோயில் காலத்தின் கோலத்தால் சிதைந்துவிட்டது. பிற்காலத்தில் தேவகோட்டை ராம. அருஅரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் இப்போதுள்ள கோயிலை கற்றளியாக கட்டித் தந்துள்ளார்கள். விமானங்கள் சுதை வேலைப்பாடுடையவை.


கோவிலுக்கு ஒரு முகப்பு வாயில் மட்டும் உள்ளது. முகப்பு வாயில் கடந்து உள் நுழைந்தால் முன் உள்ள முகப்பு மண்டபத்தில் கொடிமரத்து விநாயகர் உள்ளார். கொடி மரமில்லை. கொடிமர விநாயகர் அடுத்து பலிபீடம், நந்தி உள்ளன. பிராகாரத்தில் விநாயகர் சந்நிதியும், கருவறையின் பின்புறத்திற்கு நேர் எதிரில் சிவலிங்க சந்நிதியும், தொடர்ந்து சுப்பிரமணியர், நவக்கிரகங்கள், வியாக்ரபாதர் பதஞ்சலி ஆகியோர் பூஜித்த சிவலிங்கங்கள், சூரியன், சந்திரன் முதலிய சந்நிதிகளும் உள்ளன. அரிவாட்டாய நாயனார் - அவர் மனைவி அரிசியும் மாவடுவும் கொட்டுவது, இறைவனின் திருக்கரம் வெளிப்பட்டு நாயனாரைத் தடுப்பது, நாயனாருக்கும் மனைவியாருக்கும் இறைவன் ரிஷபாரூடராகக் காட்சி தருவது முதலியவை சிற்பங்களாகக் கல்லில் வடிக்கப்பட்டுள்ளதைக் கண்டு மகிழலாம். உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் நடராஜர், நால்வர், மனைவியுடன் அரிவாட்டாய நாயனார், கோச்செங்கட்சோழன் ஆகிய திருமேனிகள் சிறப்புடையவை. நடராஜ சபை வலதுபுறம் உள்ளது. சிவகாமி, மாணிக்கவாசகர் திருமேனிகள் உள்ளன. இத்தலத்திலுள்ள மூலவர் சிவலிங்கம் அழகான சிறிய திருமேனி. அம்பாள் சந்நிதி மிகவும் அழகாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, துர்க்கைச் சந்நிதிகள் உள்ளன. துர்க்கை சந்நிதி தனி விமானத்துடன் உள்ளது.


அரிவாட்டாய நாயனார்: தண்டலச்சேரிக்கு கிழக்கே சுமார் 2 கி.மீ. தூரத்தில் உள்ள கண்ணமங்கலம் என்ற ஊரில் (இந்த ஊர் தற்போது கண்ணந்தங்குடி என அழைக்கப்படுகிறது) வேளாளர் குலத்தில் தாயனார் என்ற பெயருடன் சிவனடியார் அவதரித்தார்.


இவர் சிவனடியார்களிடத்தில் மிகவும் அன்பு கொண்டிருந்தார். தண்டலச்சேரியில் அருள்பாலிக்கும் இறைவனுக்கு நாள்தோறும் சம்பா அரிசியில் உணவும், செங்கீரையும், மாவடுவும் நைவேத்தியம் வைத்து வழிபாடு செய்து வந்தார். இவரது மனைவியும் இவரைப்போலவே இறைவனிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். இவர்களுக்கு ஒரு சமயம் வறுமை ஏற்பட்டது. வறுமையைக்கண்டு அடியார் மனம் தளராமல் தெய்வத்திருப்பணியை விடாமல் செய்து வந்தார். கூலிக்கு ஆள் வைத்து நெல் அறுத்து வந்த இவர், வறுமை காரணமாக தானே கூலிக்கு நெல் அறுக்க சென்றார். வேலைக்கு கூலியாக கிடைக்கும் நெல்லைக்கொண்டு இறைவனுக்கு நைவேத்தியம் செய்து வந்தார். பின்னரும் இவரை இறைவன் சோதிக்க நினைத்தார். இவருக்கு கூலியாக கிடைத்ததெல்லாம் இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததால், இவரது குடும்பத்திற்கு உணவில்லாமல் போனது. இவரும் இவரது மனைவியும் கீரையை மட்டும் சாப்பிடத் தொடங்கினர். நாளடைவில் கீரைக்கும் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது தண்ணீரை குடித்து வாழத்தொடங்கினர். இறைவனுக்கு நைவேத்தியம் செய்வதற்காவது நெல் கிடைக்கிறதே என்ற மகிழ்ச்சியில் வாழ்ந்து வந்தார். ஒரு நாள் இவர் இறைவனுக்கு நைவேத்தியம் படைப்பதற்காக செந்நெல், கீரை, மாவடு ஆகியவற்றை ஒரு கூடையில் சுமந்து கொண்டு புறப்பட்டார். சாப்பிடாததால் இவரை பசி வாட்டியது. மனைவிக்கும் பசி மயக்கம். தாயனார் பசியினால் கீழே விழப்போனார். அவரை மனைவி தாங்கி கொண்டார். கூடையில் சுமந்து வந்த நைவேத்தியப் பொருட்கள் நிலத்தில் விழுந்து சிதறின. தாயனார் மனம் கலங்கினர். அவருக்கு உயிர் வாழவே விருப்பமில்லை. எனவே தம்மிடம் நெல் அறுக்க வைத்திருந்த அரிவாளை எடுத்து தன் கழுத்தை அரிந்து கொள்ள துணிந்தார். அவரது பக்தியின் ஆவேசத்தை கண்டு உடன் வந்த மனைவி திகைத்தாள். தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டு இறைவனை வேண்டினாள். அப்போது நைவேத்தியப் பொருள் விழுந்த இடத்தில் வெடிப்பு ஏற்பட்டு, உள்ளிருந்து ருத்ராட்ச மாலையும், திருநீரும் அணியப்பெற்ற திருக்கரம் ஒன்று வெளிப்பட்டது.. அத்திருக்கரம் தாயனாரின் கையைப்பற்றியது. மாவடுவை கடித்துச் சாப்பிடும் சப்தமும் கேட்டது. இறைவனின் திருக்கரம் பட்டவுடன் மெய்மறந்து நின்றார் தாயனார். தாயனாரின் பக்தியை மெச்சிய இறைவன் இத்தலத்தில் பார்வதியுடன் தரிசனம் தந்தார். அரிவாளால் தம் கழுத்தை அரியத்துணிந்தமையால் இவருக்கு "அரிவாட்ட நாயனார்" என்ற சிறப்பு பெயர் ஏற்பட்டது.


குஷ்ட நோய் தீர்க்கும் தலம்: கோச்செங்கண்ணன் என்ற சோழ மன்னன் சிவபெருமானுக்கு 70 மாடக்கோயில்கள் கட்டியவன். ஒரு முறை இவனுக்கு குஷ்ட நோய் ஏற்பட்டது. நோய் தீர இவன் பல திருத்தலங்களுக்குச் சென்றும் பயனில்லை. வருந்திய மன்னனுக்கு ஆறுதல் அளிக்க, சிவன் அசரீரியாக தோன்றி,"கல்மாடு புல் திங்கும் தலத்திற்கு சென்று வணங்கினால் உன் நோய் தீரும்"'என்றார். மன்னனும் அப்படி ஒரு தலம் தேடி அலைந்தான். இத்தலத்தில் வழிபாடு செய்ய வந்தபோது, சிவனுக்கு அணிவிக்க அருகம்புல்லால் ஆன மாலையை கையில் ஏந்தி வந்தான். அப்போது சிவனுக்கு எதிரில் இருந்த நந்தி அந்த அருகம்புல் மாலையை இழுத்துத் தின்றது. இதைக்கண்ட மன்னனுக்கு சிவன் கூறியது நினைவுக்கு வந்தது. அவனது குஷ்ட நோயும் நீங்கியது. மனம் மகிழ்ந்த மன்னன் இந்த கோயிலுக்கு திருப்பணி செய்து இறைவனை வழிபட்டான். இத்தலத்தில் நந்தி புல்லைத் தின்பதற்காக கழுத்தை திருப்பிய நிலையில் இருப்பதை இன்றும் பார்க்கலாம்.

திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளிய 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தில் சிதைந்து போன 3 பாடல்கள் போக மீதியுள்ள 8 பாடல்கள் மட்டுமே உள்ளன. இத்துணை சிறப்புகள் கொண்ட தொன்மையான திருத்தலத்தை அவசியம் நாம் சென்று தரிசித்து உயர்வடைய வேண்டுகிறேன்.


Courtesy: Sri. N. Swaminathan, No. 25, Agraharam, Thepperumanallur-612204, Kumbakonam.


39 views0 comments

Recent Posts

See All

தெய்வத்தின் குரலைத் தொகுத்த - ரா. கணபதி அண்ணா படைப்புகள்

அன்புடையீர், நமஸ்காரம் பூஜ்ய மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் ரா. கணபதி அண்ணா என்பதை அனைவரும் அறிவோம். காஞ்சி மடத்தின்...

Comments


bottom of page