பூஜ்யஶ்ரீ பெரியவா அவர்களின் ப்ரயாக் ராஜ் முகாம் தமது விஜய யாத்திரையின் ஒரு பகுதியாக 29-06-2023 அன்று மாலை அவர்கள் தம் பரிவாரங்களுடன் ப்ரயாக்ராஜ் வந்தடைந்ததும் தொடங்கியது. அது பற்றியும் அவர்கள் முகாமிட்டுள்ள ஆதிசங்கர விமான மண்டபம் தொடர்பான விவரங்களையும், ஶ்ரீபுதுப் பெரியவா, ஶ்ரீ மஹாபெரியவா என்று அவர்களது, குரு பரமகுரு இருவரது த்ரிவேணி சங்கம விஜயம் மற்றும் முகாம்கள் பற்றியும் முந்தைய பதிவுகளில் விவரமாகப் பார்த்தோம். தொடர்நது 03-07-2023 திங்கள் அன்று குரு பூர்ணிமா எனும் வ்யாஸபூஜை கோலாஹலமாக நடை பெற்றதைத் தற்போது காண்பாம்.
நமது மூலாம்னாய பீடத்தில் தற்போது ப்ரகாஸித்துக் கொண்டிருக்கும் பூஜ்ய ஶ்ரீ பெரியவாளின் 41ஆவது வருட சாதுர்மாஸ்ய வ்ரதம் தொடக்கத்தின் பூர்வமாக இவ்வருட வ்யாஸ பூஜை விசேஷமாக த்ரிவேணி எனும் கங்கா யமுனா சரஸ்வதி சங்கமத்தில் நடைபெற்றது. வழக்கமாக பூஜ்யஶ்ரீ பெரியவா தங்கி இருக்கும் இடத்திலேயே ஶ்ரீ சந்திர மெளலீஸ்வரர் பூஜையும் அருகே சற்று இடம் விட்டு வ்யாஸ பூஜைக்கான மண்டபம் விசேஷ அலங்காரத்துடன் அமைக்கப் பட்டு பூஜைகள் நடைபெறும். ஆனால் இவ் வருடம் த்ரிவேணி சங்கமத்திலேயே “வ்யாஸ பூஜை”என ஆச்சார்யாள் சங்கல்பித்து விட்டார்கள் போலும். எனவே விசேஷமான அலங்காரத்துடன் சிறப்பு மண்டபம் தயாரானது. பூஜைகளைக் காணவும் ஶ்ரீ குருநாதரின் தரிஸனம் பெறவும் ஏராளமாக வந்திறங்கிருக்கும் பக்தர்கள் செளகர்யம் கருதியும் மிகவும் பரிஶ்ரமப்பட்டும் கவனத்துடனும் உகந்த மேற்பார்வையின் கீழும் தகரம் வேயப்பட்டு உச்சியில் அடையாளம் காணத்தக்க வகையில் கொடிகளுடன் பந்தல் அமைக்கப் பட்டது. பந்தலின் பக்கவாட்டில் வண்ண வண்ண படத்துடன் கூடிய பதாகைகளும் பந்தலின் உள்ளும் புறமும் வண்ண மின்சார விளக்குகளும் கொண்ட பந்தல்-அலங்காரம் காண்போரை சுண்டி இழுத்தது. ஶ்ரீ பரணி சாஸ்த்ரிகள் சற்றே உடல் நலம் பாதிக்கபட்டிருந்த போதிலும், ஶ்ரீ பெரியவாளின் சந்நிவேஷம் காரணமாக, ஆன்ம பலமும் தேக பலமும் பெற்று பூஜைக்கன அக்ஷதை ஸ்தாபனம் முதலியவற்றிலும் காரிய க்ரமங்களிலும் சற்றும் அயராது தமது வழக்கமான உற்சாகத்துடன் தமது குழுவின் பொறுப்பினை முழுமையாக நிறைவேற்றியதில் ஆச்சரியம் இல்லை. மேலும் சாமக்ரியைகள் சேகரிப்து முதல் அனைத்து பணிகளிலும் நன்கு பழக்கப்பட்ட பார்ஷதர்கள் எனும் உதவியாளர்கள் செய்திட்ட செம்மையான பணி பாராட்டத் தக்கது. அதுவும் ஒவ்வொரு குருமாருக்கும் தனித்தனி தூப தீப நெய்வேத்தியங்களை கண் இமைக்கும் நேரத்தில், பூஜையில் லயித்துக் கொண்டே மந்திரங்களை செவி மடுத்துக் கொண்டும் அதனை கூடவே சொல்லிக் கொண்டும் இருக்கும் ஶ்ரீ பெரியவாளின் கைகளுக்கு வாகாக, தவறின்றி தாமதமின்றி மாற்றி மாற்றி எடுத்து வைத்த உதவியாளர்கள் பணி சிறப்பாக இருந்தது. உடனுக்குடன் மஹாமகோபாத்யாய சாஸ்த்ர ரத்னாகர ப்ரும்மஶ்ரீ முல்லைவாசல் மாமா வாசாமகோசரமாக இந்தியிலும் சமஸ்கிருதத்திலும் குருமார்கள் அருமை பெருமைகளை எடுத்துரைத்துக் கொண்டு வந்தது
வருகை தந்த உள்ளூர் ப்ரமுகர்கள் புரிந்து கொள்ள மிகவும் வசதியாக இருந்தது. மேலும் பூஜையின் முடிவில் பாஷ்ய பாடத்தையும் சம்ப்ரதாயமாக தொடங்கி வைத்தார். ஜகத்குருவான ஶ்ரீ க்ருஷ்ணர் தொடங்கி ஶ்ரீ வேத வ்யாஸ பகவான் உள்ளிட்டு. ஶ்ரீ ஆதிசங்கரர், அவர்தம் குரு மற்றும் ஶ்ரீசங்கரரது பிரதம சிஷ்யர்யகள் ஶ்ரீ காமகோடி பீடத்தின் 68 & 69 வது ஆச்சார்யர்களாளான முறையே ஶ்ரீ பரமாச்சார்யர் மற்றும் ஶ்ரீ புதுப் பெரியவா ஆகிய அனைத்து குருவரர்களுக்கும் முறையாக ஆவாஹனம், அர்க்ய பாத்தியம் உபசாரம் அர்ச்சனை தூப தீப நெய்வேத்தியங்களுடன் க்ரமமாக பூஜைகள் ஏரளமான பக்த ஜனங்கள் தரிஸித்துக் கொண்டிருக்க தேவாதி தேவர்கள் குடியமர்ந்த சபையே போல் கண்குளிர நடை பெற்றது. பந்தலின் உள்ளே அமர்ந்து பூஜையினை தரிஸிப்பவர்கள் வெயிலின் வெப்பத்தனை உணராதிருக்க அனைவருக்கும் கை விசிறிகள் வழங்கப் பட்டன. கூடுதல் உபசாரமாக கூட்டத்தினரை சிறிய Drone ஓன்று சுற்றி சுற்றி வந்து தென்றலுக்கு ஈடான காற்றை அவ்வப்போது வீசி வெப்பத்தை தணித்தது மிகவும் போற்றத் தக்க ஏற்பாடு. அவ்வப்போது பூஜையில் நிவேதனம் செய்யப் படும் பழங்களை, ஶ்ரீ பெரியவாளின் ஆக்ஞைப்படி பூஜையைக் காணும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டதும் கூடவே குளிர் நீர் முதலியன வழங்கியதும் நீண்ட நேரமாக அமர்ந்திருந்த பக்தர்களின் களைப்பை போக்கியது. அதே நேரம் பந்தலுக்கு வெளியே பொது ஜனங்களுக்கு பூரி சப்ஜி வழங்கப் பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகள் 32 அறங்கள் வளர்த்த அன்னை காமாக்ஷி பாரம்பரியத்தில் வளர்ந்தோர் நாம் என உலகுக்கு பரை சாற்றியது. ஶ்ரீகார்யம் மற்றும் ஶ்ரீமடம் மேனேஜர் தலைமையில் சபையோர் அனைவரும் சமஷ்டி பிக்ஷாவந்தன சங்கல்பம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
முன்னதாக ஶ்ரீ பெரியவாள் அதிகாலை 4.30 மணிக்கு முன்பே தமது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஶ்ரீ சந்திரமெளலீஸ்வரர் மூன்று கால பூஜைகளைத் தொடங்கி சுமார் 8.00 மணிக்கு முடித்துக் கொண்டார்கள். பின்னர் வபனம் ஸ்நானம் அனுஷ்டானம் என்று தொடர்ந்து பல க்ரமங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். பின்னர் த்ரிவேணி சங்கமம் சென்று மாத்யான்னிக ஸ்நானம் மீண்டும் அனுஷ்டானம் முதலியனவற்றை முடித்துக் கொண்டு சிறப்பு மண்டபத்தில் வ்யாஸ பூஜைக்கு அமர்ந்தார்கள். சோம வாரம் ஆனதால் த்ரிவேணி கரை நெடுக கடுமையான கூட்டமும் ஏராளமான கடைகளும் நிரம்பி வழிந்தன. தொடர்ந்து பல மணி நேரம் சிறப்பு பூஜைகளை முடித்தது மட்டுமல்லாது புனர்பூஜையையும் செய்து மாலை 4.45 / 5.00 மணிக்கு பூஜைகளை முடித்து பக்தர்களுக்கு அக்ஷதை பிரஸதாம் வழங்கினார்கள். உடன் விமான மண்டபம் சென்று அங்கு காத்திருந்த நியம ப்ராமணர்களுக்கு தீர்த்தம் வழங்கி ஶ்ரீ பெரியவாள் பிக்ஷைக்குச் செல்ல மாலை 6.00 மணியை நெருங்கியது.
இத்தனை பணிச் சுமைகள் நிறைந்த காரிய க்ரமங்களின் மத்தியிலும் ஶ்ரீ பெரியவா சற்றும் அயராது காலை விஸ்வ ரூப தரிஸனத்தின் போது அவர்கள் முகத்தில் காணப் பட்ட அருள் பொழியும் கண்களும் விகஸித்த புன்னகையும் நாள் முழுதும் துளியும் மாறாது இருந்தது எம் போன்றோருக்கு முக ஆச்சர்யமான ஒன்று. பூஜைகள் முடிந்து வ்யாஸாக்ஷதை பெற பக்தர்கள் முண்டி அடித்துக் கொன்டு சிறிதளவு காற்று கூட அவருக்கு கிடைக்காதவாறு சூழ்ந்து கொண்ட போதிலும் அந்த மலர்ந்த புன்னகை தவழும் முகம் துளியும் சிவக்கவோ சிணுங்கவோ இல்லயே. ஶ்ரீ பெரியவாளின் பெருமை மிக்க இந்த குணம், நிச்சயமாக தெய்வாம்ஸமே. ஶ்ரீ காமகோடி பீட குருவரர்கள் தவமென செய்திடும் அத்தனை உழைப்பும் பூஜைகளும் ஏராளமான பணிகளும் உலகமும் உலக மக்கள் அனைவரும் ஏன்?, உயிரினங்கள் அனைத்தும் நலம் பல பெற்று நல் வாழ்வு வாழ்ந்திடவே என நாம் அறிந்து கொள்வோம். நம்மால் இயன்ற கைங்கர்ய பணிகள் செய்து பிறவிப் பயன் பெறுவோமாக.
ஜய ஜய ஶங்கர ஹர ஹர ஶங்கர.
by “Sripadarenu” @ ramachandransethu@gmail.com
Comments