top of page

வரவேற்பு வாழ்த்து மடல்

6 hours ago
2 min read

காஞ்சி மடத்தின் 70- ஆவது பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் 30-09-2026 அன்று காலையில் மதுரை வாழ் நாட்டுக்கோட்டை நகரத்தார்களுக்குச் சொந்தமான மதுரை நகர விடுதிக்கு எழுந்தருளிய நல்வேளையில் அவர்களை வரவேற்று வாசித்தளித்த


*வரவேற்பு வாழ்த்து மடல்*


காஞ்சியிலே நகரத்தார் வாழ்ந்ததுண்டு!

காமாட்சி தாசர் என இருந்ததுண்டு!


காஞ்சியிலே பல கோவில் கண்டதுண்டு!

காஞ்சிமடத் தொண்டரென வாழ்ந்ததுண்டு!


வாஞ்சையுடன் காஞ்சிமடத் ததிபதியாரே!

வளர்புகழ்ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதிசுவாமி


ஊஞ்சலமர் மீனாட்சி வடக்கு வாசல்

உயர் நகர விடுதிக்கு எழுந்தீர் வாழீ!-1



காமாட்சி திருவடியைப் போற்றி செய்யும்

காஞ்சி மடத்ததிபதியே வணக்கம் கோடி!


தாமாட்சி புரிகின்ற திருமடத்தில் தனக்கடுத்த ஆச்சாரியர் தந்தீர்வாழி!


கோமாட்டி மீனாட்சி வாசல் வந்தீர்!

கொலுவீற்றீர்! நகரத்தார் விடுதி வந்தீர்!


சீமாட்டி அம்பிகையின் உருவாய்த் தாயாய்

சீர்மிகுந்த தந்தையெனக் காப்பீர்வாழி!-2



கோபுரத்தின் அருகினிலே விடுதி உண்டு!

கோபுரமே விடுதிக்குள் வந்தது இன்று!


நூபுரமே!நூதனமே!நொடியிலெங்கள்

நோவுகளைத் தீர்த்தருளும் அருமருந்தே!


மாபுரமாம் மதுரைநகர் சொக்கர் போல

மதுரைநகர் விடுதிக்கு வந்தீர்வாழி!


கூப்புகிறோம் ஒருகோடித் தாள் வணக்கம்!

குருவே நீர் எழுந்தருளிக் காப்பீர் ஐயா!-3



காசி முதல் ராமேசம் கடவுட்கெல்லாம்

கனத்த திருப்பணி செய்த குலமே நாங்கள்!


தேசுபுகழ் மதுரையிலும் குடமுழுக்கைத்

தொய்வின்றிச் செய்தவர்கள் நகரத்தார்கள்!


மாசில்லா இந்து மதக் கோட்டைக்காப்பு

மகத்தான வீரர் என்றார் பெரியவாளும்!


பேசரிய காஞ்சியிலும் குடமுழுக்காட்டி

பெரியவரின் அருளாலே கீர்த்தி பெற்றோம்!-4



தண்டலத்தில் உதித்தெழுந்த தவமே போற்றி!

தனக்கில்லை ஈடு என்னும் தகைமை போற்றி!


மண்டலமே புகழ் மதத்தின் குருவே போற்றி!

மகத்தான காமாட்சி தாசர் போற்றி!


பண்டு புகழ் காசியிலே விசாலாட்சிக்கும்

பார்புகழும் மதுரை நகர் மீனாட்சிக்கும்


தொண்டுபுரி நகரத்தார் விடுதிவந்த

தொல்புகழே!காமாட்சி வடிவே போற்றி!-5



அறுபத்தி ஒன்பதிலே பட்டம் ஏற்றீர்!அடுத்த நொடி தசகத்தை இயற்றித் தந்தீர்!


ஈரேழு வயதுக்குள் துறவியாகி

இத்தலைமைப் பொறுப்பிற்குப் பொறுமை காத்தீர்!


சீரானமனத் தெளிவே!ஸ்ரீராமர் திருவுருவே!

சிவனாரின் வடிவழகே! ஸ்ரீபாதம் வணங்குகிறோம்!


ஆராவமுதே!அருட்தாளிணை போற்றி!

அருள்மலரே விஜயேந்திரர் அடிகள் போற்றி!-6



இளசைநகர் உறைந்தமகா தேவேந்திரரின்

ஈடில்லா ஆசியினால் இனிதுயர்ந்தோம்!


வளமிகுந்த ஓரிக்கைப் பெரியவாளின்

வார்த்தையினால் வள்ளலென வழங்குகின்றோம்!


தளவரிசை மீனாட்சி கோயிலுக்கு தக்கதொரு கோபுரமுங்கட்டி வைத்தோம்!


அளக்கின்ற ஈசனவன் அடியைப்போற்றும்

அறம்வளர்த்தார் விடுதிக்கு வந்தீர் போற்றி!-7



நகரத்தார் தவப்பயனே போற்றி!போற்றி!

நால்வேதம் வாழ்விக்கும் நாதா போற்றி!


சிகரத்தில் இருக்கின்ற கலசம்போற்றி!

சிறியோர்க்கும் அருள்கின்ற கருணைபோற்றி!


உகரமென இருந்தெம்மைக் காப்பீர்போற்றி!

உலகீன்ற சங்கரரின் அம்சம் போற்றி!


அகரமெனும் தமிழாலே வாழ்த்துகின்றோம்!

அகிலமெலாம் சிவம்பெருக்கும் அறமே போற்றி!-8


வருக!வருக என வரவேற்று வணங்கும்!


நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், மதுரை நகரத்தார் சங்கம்,

நகர விடுதி,

வடக்குச் சித்திரை வீதி,

மதுரை

2025-2027 ஆம் ஆண்டுநடப்பு நிர்வாகிகள்




கவியாக்கம்:-

"தமிழ்க்கடல்" வர்ணனைச் சக்கரவர்த்தி" தேவகோட்டை இராமநாதன் BA.BL.

நாட்டரசன் கோட்டை.

99420-35757.

Comments


bottom of page