top of page

Abirami Bhattar

Courtesy: https://mahaperiyavaa.wordpress.com

According to Paambu Panchangam, January 20th is the day when Goddess Abirami gave darshanam to Bhattar in Thirukadaiyur. Let us see what Mahaperiyava had said about this mahan in Dheivathin Kural Vol 2

abirami.jpg

சத்தியத்திலேயே ஒருவன் நிலைத்து நின்று விட்டால் அதற்கு ஓர் அவாந்தரப் பிரயோஜனம் உண்டு – அதாவது அந்த சத்தியசந்தன் உத்தேசிக்காமலே ஒரு பிரயோசனம் சித்திக்கும். அது என்னவெனில், ஒருவன் சத்தியமே பேசிப் பேசி பழகிவிட்டால் கடைசியில் அவன் எது சொன்னாலும் அது சத்தியமாகிவிடும். இப்படிப்பட்டவன் மனமறிந்து பொய் சொல்லவே மாட்டான். ஆனால், அறியாமையாலோ தவறிப்போயோ அவன் ஒரு விஷயத்தைத் தப்பாகச் சொல்லி விட்டாலும், அந்தத் தப்பே யதார்த்தத்தில் சத்தியமாக நடந்துவிடும். இதற்குத் திருஷ்டாந்தமாக ஒரு கதை சொல்கிறேன்.

திருக்கடவூரில் அபிராமி பட்டர் என்று அம்பாளின் பரம பக்தர் இருந்தார். அவர் அம்பாளையே நினைத்து பரவசமாகும்போது உன்மத்தரைப் போலப் பிதற்றுவார். இதைப் பற்றி சரபோஜி ராஜாவிடம் யாரோ துஷ்பிரசாரம் செய்தார்கள். ‘அபிராமிபட்டர் ஒரு குடிகாரர், பக்தர் என்று வேஷம் போடுகிறார்’ என்று ராஜாவிடம் கோள் சொல்லிவிட்டார்கள். சரபோஜிக்கு இதைப் பரிசோதித்துப் பார்க்கத் தோன்றியது. ஒரு நாள் சரபோஜி திருக்கடவூரில் அம்பாளை தரிசிக்க வரும்போது, அங்கே தன் வசமிழந்திருந்த பட்டரிடம், ‘இன்றைக்கு என்ன திதி?’, என்று கேட்டான். அன்றைக்கு அமாவாஸை. பட்டரோ அம்பாளின் பூரண சந்திர முகத்தையே தியானம் செய்து பரவசமாக இருந்தார். எனவே, அரசரிடம், இன்று பெனர்ணமி என்று சொல்லிவிட்டார். அரசன் தன்னிடம் மற்றவர்கள் பட்டரைப் பற்றிச் சொன்னது உண்மை என்றே நினைத்தான். பட்டரிடம் கேலியாக, “அப்படியா! சந்திரன் உதயமாகிவிட்டானா என்று ஆகாயத்தைப் பார்ப்போம்” என்று தலையைத் தூக்கினான்.

அப்போது வாஸ்தவமாகவே ஆகாயத்தில் பூரண சந்திரன் வந்து நின்றது, அபிராமி பட்டர் சத்தியத்திலேயே ஊறியிருந்ததால், தவறிப்போய் அவர் அசத்தியத்தைச் சொன்னபோது, அம்பாளே தன் தாடங்கத்தைக் கழற்றி ஆகாயத்தில் வீசீ, பூரண சந்திரனாக ஜொலிக்கச் செய்தாள்.

மகான்கள் செய்கிற ஆசீர்வாதம் அவர்கள் கொடுக்கிற சாபம் எல்லாம் அப்படியே பலித்து விடுவதற்குக் காரணம் அவர்களுடைய சத்தியத்தின் சக்திதான். அவர்கள் எது சொன்னாலும் நடந்துவிடும். இது சத்தியமாக இருப்பதின் அவாந்தரப் பிரயோஜனம். ஆனால், தான் சொல்வதெல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை கொண்டு அதன் பொருட்டாக ஒருவரும் சத்தியத்தை அநுஷ்டிக்கக்கூடாது. உத்தேசமில்லாவிட்டால்தான் இந்தச் சக்தி தானாக வருமே ஒழிய உத்தேசித்துவிட்டால் அப்புறம் அது ‘அவாந்தர’மே இல்லை.

கர்ப்பமாக நாம் தாயாரிடம் வைக்கப்படுவதிலிருந்து, கடைசீயில் தகனமாகிற வரையில் நம்மை சுத்தப்படுத்த சாஸ்திரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்கள் சொல்லியிருக்கிறது. அவற்றோடு, அஹிம்ஸை, சத்தியம், அஸ்தேயம், சௌசம், இந்திரிய நிக்ரஹம் இவையும் நம்மால் அநுஷ்டிக்கப்பட்டால், நம் அழுக்குகள் எல்லாம் போய், ‘நாம் உண்மையில் யார்? ஸ்வாமி என்பவர் யார்? பரம சத்தியம் என்பது என்ன? என்பதை எல்லாம் அறிகிற பக்குவம் உண்டாகும். பிறர் பொருள் மீது ஆசைப்படாமலிருப்பதே அஸ்தேயம். ‘சௌசம்’ என்பது ‘சுசி’ என்பதிலிருந்து வந்தது. ‘சுசி’ என்றால் சுத்தம். வெளியே சுத்தமாக, தூய்மையாக, ஆசாரமாக இருந்தால் அதுவே உள்தூய்மைக்கு உபகாரம் செய்யும். நீராடுவது, மற்ற மடி ஆசாரங்கள் சௌசத்தின் கீழ் வரும். இந்திரிய நிக்ரஹம் என்பது ரொம்பவும் முக்கியம். சரீர சந்தோஷத்துக்காக எதை வேண்டுமானாலும் செய்வது, எதை வேண்டுமானாலும் பார்ப்பது, எதை வேண்டுமானாலும் கேட்பது, எதை வேண்டுமானாலும் தின்னுவது, எதை வேண்டுமானாலும் பேசுவது என்றில்லாமல், இவற்றையெல்லாம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது இந்திரிய நிக்ரஹம்—புலனடக்கம்—அதாவது யாராக இருந்தாலும் ஆசையைக் குறைத்துக் கொள்ள வேண்டும். ஆசை போகாமல் எந்த ஆத்ம சம்பத்தும் உண்டாகாது.

இங்கே சொன்னதெல்லாம் சகல ஜனங்களுக்குமான சாமானிய தர்மங்கள்.

Let us know about the great incident that resulted in one of the finest devi stuthi “Abirami Andhathi”

பொன்னிநதி என்னும் காவிரி வளம் சேர்க்கும் தஞ்சைத் தரணியில் 300 ஆண்டுகளுக்கு முன் பிறந்த அருளாளர் அபிராமி பட்டர். காலனைச் சம்ஹாரம் செய்த சிவபெருமான் அருள்புரியும் திருக்கடையூர் என்னும் திருத்தலத்தில் இவர் அவதரித்தார். இசைத்துறையிலும் பாடல் புனைவதிலும் வல்லவராக இருந்தார். அம்பிகையை வழிபடும் சாக்த நெறியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். ஒளி வடிவில் அம்பிகையைத் தரிசித்து பேரின்பம் கண்டார். ஆனால், இவரின் தெய்வீகநிலையை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. பித்தன் என்று வசைபாடினர். அவர்களின் ஏச்சையும் பேச்சையும் அபிராமி பட்டர் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. அக்காலத்தில் தஞ்சையை தலைநகராகக் கொண்டு சரபோஜி மன்னர் ஆட்சி செய்து வந்தார். அம்மன்னர் மகாராஷ்டிர வம்சத்தைச் சேர்ந்தவர். இறையுணர்வு, மத உணர்வில் இவருக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஒரு தை அமாவாசை நாளில் சரபோஜி மன்னர் திருக்கடையூர் கோயிலுக்குத் தரிசனம் செய்ய வந்திருந்தார். கோயிலில் அபிராமி பட்டர் அம்பிகையின் முன்னர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

abirami_andhathi1.jpg

மன்னரின் வருகையைக் கூட கவனிக்காமல் பட்டர் இருப்பதைக் கண்ட மன்னர் வியப்பில் ஆழ்ந்தார். ஆனால், சுற்றியிருந்தவர்கள் மன்னரிடம், மன்னா! தங்களுக்கு தர வேண்டிய மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன், என்று பட்டரைப் பற்றி புகார் கூறினார் ஆனால், சரபோஜி மன்னர் அவர்கள் சொன்னதை நம்பவில்லை. இருந்தாலும், பட்டரின் உள்ளுணர்வை அறிய விரும்பிய மன்னர், பட்டரே! இன்று என்ன திதி? என்று கேட்டார். அப்போது கண் திறந்த பட்டர், அபிராமி அம்பிகையை ஏறிட்டுப் பார்த்தார். அவளது முகம் பிரகாசித்தது. அந்த அருள் முகத்தில் லயித்தவராக, இன்று பவுர்ணமி என்றார். ஏதோ நினைவில் அப்படி சொல்கிறார் என நினைத்த மன்னர், இதே கேள்வியை மீண்டும் கேட்டார். அப்போதும் அதே பதில் வந்தது. பின்னர், சுதாரித்து பார்த்த போது மன்னர் கேள்வி கேட்டதும், அதற்கு சரியான பதில் சொல்லாததும் தெரியவந்தது.

தன் வாக்கு பொய்த்துவிட்டதே என்று கதறி அழுதார். அரசர் வரும் வேளையில் கவனக்குறைவால் ஏற்பட்ட தவறிலிருந்து அம்பிகையே தன்னைக் காத்தருளவேண்டும் என்று அரிகண்டம் பாடினார். அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டினார். விறகை அடுக்கி தீமூட்டினார். அதற்கு மேல் ஒரு விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டினார். அதில் ஏறி அமர்ந்து கொண்டார். உதிக்கின்ற செங்கதிர் என்று பாடத் தொடங்கினார்.

ஒவ்வொரு பாடல் முடிந்ததும் உறியின் ஒவ்வொரு கயிறையும் அறுத்துக் கொண்டே வந்தார். பட்டர் பல பாடல்கள் பாடியும் அம்பிகையின் அருள் கிட்டவில்லை. அம்மா! உன் விழிக்கே அருள் பார்வையுண்டு. பழிபாவம் கொண்டு உழலும் மாந்தருடன் இனி எனக்கு என்ன தொடர்புண்டு? என்ற பொருள்படும் வகையில்,விழிக்கே அருளுண்டு அபிராமிவல்லிக்கே என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். தன் தாடங்கம் என்னும் தோடினை எடுத்து வானவீதியில் தவழ விட்டாள். அந்த தாடங்கம் வானில் மிதந்து பலகோடி நிலாக்கள் ஒன்றுகூடினாற் போல் ஒளியைப் பொழிந்தது. அவள் பட்டரிடம், நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடு, என்றாள். அம்பிகை அருள்பெற்ற அபிராமிப்பட்டர் பரவசமுற்றார். அதோடு, தம் அனுபூதிநிலையை வெளிப்படுத்தும் அந்தாதிப் பாடல்களைப் பாடி நிறைவு செய்தார். அபிராமிப்பட்டரின் உறுதியான பக்தி கண்டு சரபோஜி மன்னரும் அக மகிழ்ந்தார்.

மன்னரிடம் பட்டரைப் பற்றி பித்தன் என்றும் பேயன் என்றும் கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு கேட்டனர். மன்னரும் மனம் மகிழ்ந்து பட்டருக்கு ஏராளமான மானியம் அளித்தார். அபிராமி அந்தாதி ஒரு அற்புதமான தெய்வீக துதிநூலாக திகழ்கிறது. இந்நூலில் யாவரும் வணங்கும் தெய்வமே! என்னைப் பெற்ற தாயே! வேதமாகவும், உபநிடதங்களாகவும் திகழ்பவளே! அருட்செல்வத்தை அள்ளித்தருபவளே! தீவினையாகிய நரகத்தில் விழாதபடி அடியவர்களைக் காப்பவளே! அருள்நிறைந்த திருவடிகளால் அடைக்கலம் தருபவளே! மனிதர்கள், தேவர்கள், முனிவர்கள் வணங்கும் பெருமை பெற்றவளே! உயிர்களின் ஆதாரமே! வஞ்சிக்கொடி போன்றவளே! மனோன்மணித்தாயே! என்று பல விதமாகப் போற்றியுள்ளார். அபிராமி அந்தாதியை பவுர்ணமி, வெள்ளிக் கிழமைகளில் பாராயணம் செய்து வருபவர்களின் எண்ணங்கள் யாவும் நிறைவேறும் என்பது சக்தி உபாசகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

50 views0 comments
bottom of page