top of page

Thirunanipalli temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம்.

*கோவை.கு.கருப்பசாமி.*

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*தல தொடர். 61.*

*சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.*

(நேரில் சென்று தரிசித்ததைப் போல.......)

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*திருநனிபள்ளி.*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

*இறைவன்:* நற்றுணையப்பர்.

*இறைவி:* பர்வதராஜ புத்திரியம்மை ,

மலையான் மடந்தையம்மை.

*தலமரம்:*செண்பகமரம், பின்னமரம்.

*தீர்த்தம்:*சொர்ண தீர்த்தம்.

*புராண பெயர்:*

திருநனிபள்ளி

*தற்போதைய பெயர்:* புஞ்சை.

சோழநாட்டின் காவிரித் தென்கரையில் அமையப்பெற்றுள்ள நூற்று இருபத்தெட்டுத் தலங்களுள் இத்தலம் நாற்பத்து மூன்றாவதாகப் போற்றப் பெறுகின்றது.

*இருப்பிடம்:*

மயிலாடுதுறையிலிருந்து அடிக்கடி பேருந்துகள் உள்ள தலம். இக்கோவில், செம்பனார் கோவிலுக்கு வடகிழக்கில் உள்ளது.

*பெயர்க்காரணம்:*

மக்கள் புஞ்சை என்று வழங்குகின்றார்கள். சம்பந்தரின் தந்தையார் தன் தோள் மேல் அமரச் செய்து இத்தல பதிகத்தை அருளிச் செய்துள்ளார்.

பாலையாக இருந்த நிலத்தினை நெய்தல் நிலமாக மாற்றி மீண்டும் அந்த நிலத்தை வளம்மிகு மருதநிலமாக மாற்றினார்.

சமணர்கள் பள்ளிகள் இங்கு மிகுதியாகக் காணப்பட்டதால் நனிபள்ளி எனப் பெயர் பெற்ற இத்தலம் தற்போது கிடாரங்கொண்டான் புஞ்சை என்று அழைக்கப்படுகிறது.

*தேவாரம் பாடியவர்கள்:*

*சம்பந்தர்* 2-ல் ஒரே ஒரு பதிகமும்,

*அப்பர்*4-ல் ஒரே ஒரு பதிகமும், 6-ல் ஒரே ஒரு பதிகமும்,

*சுந்தரர்* 7-ல் ஒரே ஒரு பதிகமும் ஆக மொத்தம் நான்கு பதிகங்கள்.

*அமைப்பு:*

இக்கோவில் முக்கால் ஏக்கர் நிலப்பரப்பளவுடன் ஒரு பிராகாரத்தோடு அமைந்துள்ளது.

ஊரின் நடுவே ஓங்கி உயர்ந்த மதில்களுடன் கூடிய ஆலயத்தினுள் உள் புகுகிறோம்.

கோவில் மதில்கள் இருக்கும் சாலையை ஒட்டி திருக்குளமிருக்க, குளத்தீர்த்த்தை தலைமீது தெளித்து வானினை ப் பார்த்து வணங்கிக் கொண்டோம்.

இராஜகோபுரம் இல்லாதது வருத்தமிருந்தது. அதோடவே கோயிலுக்குள் சென்றோம்.

முதல் வாயிலின் மேல் பஞ்சமூர்த்திகளின் தரிசனத்தை முதலில் வணங்கிப் பெற்றுக் கொண்டோம்.

முன்னதாக உள்ள கொடிமரம், நந்தி, பலிபீடம் இருக்க, வழக்கம் போல் அவர்களுக்கே உண்டான தகுதி வணங்குதலை செலுத்திக் கொண்டோம்.

இதற்கடுத்தாற்போல் நகர, நீண்டதொரு முக மண்டபம் இருக்க, அந்த மண்டபத்தைத் தாங்கி நிற்கும் கம்பீர உருளை வடிவிலான நிறையத் தூண்களின் அழகினை வரிசையாக ரசித்த வண்ணம் தொடர்ந்தோம்.

இங்கிருக்கும் இரண்டு அம்மன் சந்நிதிகளில் முதலாவதாக, முன் மண்டபத்தின் இடப்புறம் தென்முகமாக அமர்ந்து அருள்பாலிப்பதை, வணங்கி அவளருளைப் பெற்றுக் கொண்டோம்.

இதே மண்டபத்தின் இரு பக்கமும், மேற்கு திருமாளிகைச் சுற்றில் மூன்று விநாயகர் சிலைகள், சூரியன், நால்வர், ராகு, பைரவர், லட்சுமி நாராயணர், ரதேசுவரர் சிலா ரூபங்கள் நிறுவியிருப்பதைக் கண்டு ரசித்தும் வணங்கியும் சென்றோம்.

பின் பிராகாரம் வலம் வருகையில் தெற்குப் பிராகாரத்திலீ மேற்கு நோக்கியிருக்கும் மற்றொரு அம்மையை வணங்கி அருள் பார்வையைப் பெற்றோம்.

தேவகோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கையை வணங்கி நகர்ந்தோம்.

சண்டேசர் தனது சக்தியுடன் காட்சி தந்ததை பயபக்தியுடன் வணங்கிக் கொண்டோம்.

*தல அருமை:*

சம்பந்தரின் தாயாரான பகவதியம்மாள் பிறந்த தலம்.

சம்பந்தர் தன் தந்தையின் தோளில் அமர்ந்தபடி பதிகம் பாடிய தலம்

சம்பந்தர் பதிகம் பாடி பாலையாக இருந்த இத்தலத்தை நெய்தல் நிலமாகவும் , பின் நெய்தல் நிலத்தை கானகமும் , வயலுமாகவும் மாற்றியதாக சொல்லப்படுகிறது.

கருவறை அளவில் பெரியதாகவும் , சிறந்த வேலைப்பாடு நிறைந்ததாகவும் திகழ்கிறது . கோஷ்டத்தில் உள்ள மூர்த்தங்கள் அனைத்தும் பேரழகு நிறைந்தவை . ஒவ்வொரு மூர்த்தத்தின் மேலே அமைந்துள்ள மகர தோரணங்கள் நுட்பமான , அரிய சிற்ப வேலைப்பாடுகளுடன் தனித்தன்மை கொண்டு திகழ்கின்றன .

திருநனிப்பள்ளி கோடி வட்டம் எனப்படும் இம் முழுமையான கருவறை அமைப்பு தனித்தன்மையும் , தனிச்சிறப்பும் கொண்ட சிற்ப அமைப்பாக சொல்லப்படுகிறது.

கோயில் மூலஸ்தானமும், கோயில் மண்டபங்களும் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளது.

மனைவியுடன் சண்டிகேஸ்வரர் உள்ளார்.

இரு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.

மூலவர் கிழக்கு நோக்கியும் , அம்பாள் இருவரும் மேற்கு மற்றும் தெற்கு நோக்கியும் திருக்காட்சி தருகின்றனர்.

விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம்.

எனவே இங்கு சுவாமியின் வலது பக்கம் அம்மன் வீற்றிருக்கிறார். இது தவிர

தனி சன்னதியில் மூலஸ்தானத்திலேயே அம்மனுடன் கல்யாணசுந்தரேஸ்வரர் அருளுகிறார்.

அகத்தியருக்கு காட்சி அளித்தவர் கல்யாண சுந்தரேஸ்வரர்.

மகாமண்டபத்தில் நடராஜர் சபை அழகுகாட்டி ஆடல் அருளாட்சி தரிசனம் தருகிறார்.

துர்க்கையம்மன் மான் மற்றும் சிம்மம் ஏந்தி

சும்பன், நிசும்பனை சம்ஹாரம் செய்த கோலத்தில் பேரழகுடன் திருக்காட்சி தருகிறாள்.

காவிரிநதி இங்கு கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.

அகத்தியரின் கமண்டலத்திலிருந்த தீர்த்தத்தை விநாயகர் தட்டி விட்டதால் அவருக்கு தோஷம் ஏற்படுகிறது. இந்த தோஷம் நீங்க விநாயகர் இங்குள்ள குளத்தில் நீராடி வழிபாடு செய்துள்ளார்.

இதனால் இத்தலம் *"பொன்செய்'* ஆனது. இதுவே காலப்போக்கில் மருவி *"புஞ்சை'* ஆனது.

அருகில் செம்பனார் கோயில் தலம். ஆண்டு தோறும் சித்திரை 7 - 13 வரை சூரிய வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது.

பிரதோஷம் மற்றும் சிவனுக்குரிய அனைத்து வழிபாடுகளும் செய்யப்படுகிறது.

திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்குள்ள கல்யாணசுந்தரரை வணங்கினால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதும், நற்றுணையப்பரை வணங்கினால் செல்வ செழிப்பு, குழந்தைகளின் படிப்பு சிறக்கும் என்பதும் நம்பிக்கை.

*தல பெருமை:*

நாகப்பட்டினம் மாவட்டம் கிடாரங்கொண்டான் அடுத்துள்ள நனிப்பள்ளி உள்ளது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் இது.

திருஞானசம்பந்தரது தாயார் பகவதியம்மை பிறந்த தலமாகும் சீர்காழியில் அன்னை உமாதேவியிடம் ஞானப்பால் உண்டு, திருக்கோலக்காவில் அப்பன் ஈசனிடம் பொற்றாளம் பெற்ற பின்னர், திருநனிப்பள்ளி அடியார்களின் அழைப்பிற்கு இணங்கி, தந்தையின் தோள் மீதமர்ந்து இங்கு வந்து இறைவன் மீது பதிகம் பாடி, பாலையாக இருந்த நிலத்தினை நெய்தல் நிலமாய் மாற்றினார் திருஞானசம்பந்தர். மீண்டும் அந்த நிலத்தை வளமிகு மருதநிலமாக மாற்றினார்.

*இறைவன் விரும்பி உறையும் இடம்:*

சம்பந்தர் மட்டுமல்லாது, அப்பரும், சுந்தரரும் இத்தலம் மீது பதிகம் பாடிப் போற்றியுள்ளனர். இயற்கை வளம் நிறைந்த இப்பதி, இறைவன் விரும்பி உறையும் இடமென்றும், இதுபோன்ற காதல் நகர் கீழுலகிலும், மேலுலகிலும் இல்லை என்றும் பாடிப் பரவசப்படுகின்றார் சம்பந்தர்.

தனது அடியவரை நரகத்தில் விழாது காக்கும் நற்றுணையப்பர் விளங்கும் நனிப்பள்ளியென்றும் தொன்னூற்று ஆறு தத்துவங்கள் அடங்கிய உடம்பினைக் கொண்டு ஈசனை உணராத நம்மை எண்ணி வருந்தியும் பகர்கின்றார்.

அப்பர், சுந்தரர். நம்பியாண்டார் நம்பியும், சேக்கிழாரும் இத்தலத்திற்கு சம்பந்தரோடு கூடிய தொடர்பினை செவ்வனே எடுத்துரைத்துள்ளனர்.

சோழப் பேரரசான ராஜேந்திர சோழன், தந்தை ராஜராஜனின் ராஜராஜேச்சுரம் என்னும் தஞ்சை பிரகதீஸ்வரம் போன்று கங்கை கொண்ட சோழீச்சுரத்தை அரிய சிற்ப நுணுக்கங்களோடு படைத்தான். *‘‘கெடா’’*என்ற நகரத்தை வென்றதன் நினைவாக *‘‘கடாரம் கொண்ட சோழீச்சுரம்’’* என்ற ஊரையும் சோழ நாட்டினில் உருவாக்கினான். இதனால் மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு *‘‘பூர்வ தேசமும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன்’’* என்னும் சிறப்புப் பட்டமும் வழங்கப் பெற்றது!.

கடாரம் கொண்டான் என்பதே மருவி கிடாரங்கொண்டான் ஆகிவிட்டது. அதியற்புத சிற்ப வேலைபாடுகள் கொண்ட பிரமிக்க வைக்கும் பிரமாண்ட விமானத்தை தன்னகத்தே கொண்டு தனித்துவப் புகழுடன் விளங்குகின்றது. இந்த நனிப்பள்ளி சிவாலயம்.

இங்கு காணப்பெறும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் சோழர்களின் சிற்பக் கலைத் திறத்தை உலகிற்கு பறை சாற்றுகின்றது.

*பார்வதி, பரமேஸ்வரனின் கல்யாண காட்சி:*

அகத்தியர் இங்கு பார்வதிபரமேஸ்வரனின் கல்யாண காட்சியைக் கண்டுள்ளார். காகம் ஒன்று இத்தல சொர்ண தீர்த்தத்தில் நீராடி, பொன்னிறமானதாக வரலாறு. ஊரின் நடுவே ஓங்கிய மதில்களுடன் ஒய்யாரமாய் ஒளிர்கின்றது திருக்கோயில். முதல் வாயிலின் மேல் பஞ்சமூர்த்திகளின் தரிசனம். முன்னே கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியன உள்ளன. இங்கே இரு அம்மன் சந்நதிகள் உண்டு. முதல் சந்நதி முன், மண்டபத்தின் இடப்புறம் தெற்கு முகமாக அமைந்துள்ளது. இந்த அம்மனை கல்யாண ஈஸ்வரி என அழைப்பர். இந்த முக மண்டபத்தின் இரு பக்கமும் மேற்குத் திருமாளிகைப் பத்தியில் மூன்று விநாயகர் சிலைகள், சூரியன், நால்வர், ராகு, பைரவர், லட்சுமி நாராயணர், வேணுகோபாலர், ரதேஸ்வரர், கிழக்கு முகமுள்ள தனி சனீஸ்வரர் ஆகிய சிலாரூபங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அடுத்ததாக மகா மண்டபம்! இங்கு அழகிய தூண்கள் பல எழுந்து, பிரமாண்டத்தை வெளிப்படுத்துகின்றன.

கர்ப்பகிரகம் மிகவும் விசாலமானது. ஒரு யானை வலம் வரும் அளவிற்கு உட்பரப்பு அதிகமுடையது. அதன் நடுநாயகமாக லிங்கத் திருமேனி கொண்டு நமக்குப் பேரருள் புரிகின்றார் நற்றுணையப்பர்.

இவரை வணங்கி, பிராகார வலம் வருகையில் தென்கிழக்கில் மடப்பள்ளி உள்ளது. அதற்கடுத்தாரற் போல் தெற்குப் பிராகாரத்தில் மேற்கு நோக்கியப்படி அம்பாள் சந்நதியுள்ளது. அருகே அம்பாளுடன் கூடிய கல்யாண சுந்தரேஸ்வரர் சந்நதியும் உள்ளது. அம்பாள் இங்கே ஸ்வாமிக்கு எதிராக மாலை மாற்றும் கோலத்தில் வீற்றிருக்கின்றாள். அம்பாள் இங்கு *மலையான்மடந்தை* என்ற பெயரை தாங்கி கருணை புரிகின்றாள். பர்வதபுத்ரி என்றும் அழைக்கப் பெறுகின்றாள்.

மேற்கில் கிழக்கு முகம் கொண்ட கணபதி சந்நதியும், வள்ளி- தெய்வானையுடனான கந்தன் சந்நதியும் அமைந்துள்ளது. சுவாமி கருவறை விமானம் மிகவும் பிரமாண்ட அமைப்புடையது.

அகத்தியர், கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா மற்றும் துர்க்கை என ஆறு தெய்வ சிலைகள் இங்கே காணப்படுகின்றன. துர்க்கை மிகக் கம்பீரமாய் ஒரு கரத்தால் அபயம் அளித்தும், மறுகையை இடுப்பில் மடித்தும், கால்களை சற்றே மடக்கியவாறும், மிகுந்த கலை வடிவினளாய் கருணை பொழிகின்றாள்.

அக்காலத்தில் கட்டிட கட்டிட வேலைக்கு ஒப்பந்தம் செய்கிறவர்கள், திருவலஞ்சுழி பலகணி, ஆவுடையார் கோவில் கொடுங்கை, திருவீழிமிழலை வெளவால் நெத்தி மண்டபம், நனிபள்ளி கோடி வட்டம் (விமானத்தை அகலப்படுத்தும் அமைப்பு) போலன்றி கட்டுவோம் என ஒப்பந்தம் செய்வார்களாம்.

*திருவிழாக்கள்:*

ஆண்டு தோறும் சித்திரை 7, 13 தேதிகளில் சூரிய பூஜை கொண்டாட்டம்.

பிரதோஷமும் மற்றும் சிவனுக்குரிய அனைத்து வழிபாடுகளும் நடக்கிறது.

*பூஜை:*

சிவாகம முறையில் இரண்டு கால பூசை.

காலை 7.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை,

மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை.

*அஞ்சல் முகவரி:*

அ.மி/ நற்றுணையப்பர் திருக்கோயில், புஞ்சை கிடாரங்கொண்டான் அஞ்சல், மாயவரம், கீழையூர், மயிலாடுதுறை வட்டம், நாகை மாவட்டம். 609 304.

*தொடர்புக்கு:*

முத்தையா குருக்கள். 04364- 283188

முருகன். 93441 25472, 96989 50011

திருச்சிற்றம்பலம்.

Reposting it from Amritha Vahini Google group.

131 views0 comments
bottom of page