உழவர் ஓதை, மதகு ஓதை,
உடை நீர் ஓதை, தண்பதம் கொள்
விழவர் ஓதை, சிறந்து ஆர்ப்ப,
நடந்தாய்; வாழி, காவேரி!
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன்
வளனே; வாழி, காவேரி!
என்று சிலப்பதிகாரம் புகழும் காவிரி பாயும், தஞ்சைத் தரணிக்கு பல வகைகளில் புகழ் சேர்க்கும் திருக்குடந்தையைப் பற்றிய மிக அரிய தகவல்களை 'கும்பகோணத்தில் உலா' என்ற புத்தகத்தில் அருமையாக வழங்கியிருக்கிறார் 'திருப்புகழ் அமுதன்' வலையப்பேட்டை திரு ரா.கிருஷ்ணன் அவர்கள். காவிரி அன்னைக்கு கோலாகலமாக விழா நடக்கும் இத்தருணத்தில், இவ்வரிய தகவல் களஞ்சியத்திலிருந்து, காவிரியைப் புகழ்ந்து தொடங்கும் 'மாவிலைத் தோரணம்' (நுழைவாயில்) என்ற பகுதியைப் படித்து இன்புறுவோம்.