உ
சிவாயநம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு. கருப்பசாமி.*
*சிவ தல தொடர். 115.*
☘ சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.☘
*திருக்கடுவாய்க்கரைப் புத்தூர்.*
*சொர்ணபுரீசுவரர் கோவில், திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (தற்போது இத்தலம் ஆண்டான்கோவில் என்று வழங்குகிறது)*
*இறைவன்:* சொர்ணபுரீசுவரர்.
*இறைவி:* சிவாம்பிகை, சொர்ணாம்பிகை.
*திருமேனி:* சுயம்புவானவர்.
*தல விருட்சம்:* வன்னிமரம்.
*தீர்த்தம்:* திரிசூல கங்கை.
*பதிகம்:* திருநாவுக்கரசர்.
*இருப்பிடம்:*
கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழியாக குடவாசல் செல்லும் வழியில் வலங்கைமானில் இருந்து கிழக்கே சுமார் மூன்று கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.
கும்பகோணத்தில் இருந்து சுமார் பன்னிரண்டு கி.மி. தொலைவு. கும்பகோணத்தில் இருந்து நரசிங்கமங்கலம் செல்லும் நகரப் பேருந்து எண் A20 கோவில் வழியாகச் செல்கிறது.
தஞ்சாவூரில் இருந்து வலங்கைமான் வழியாக திருவாரூர் செல்லும் பேருந்துகள் ஆண்டான்கோவில் வழியாகச் செல்கின்றன. ஆண்டான்கோவில் நிறுத்தத்தில் இறங்கி சுமார் அரை கி.மி. நடந்தால் சொர்ணபுரீசுவரர் ஆலயத்தை அடையலாம்.
*அஞ்சல் முகவரி:*
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில்,
ஆண்டான்கோவில்,
ஆண்டான்கோவில் அஞ்சல்,
வலங்கைமான் S.O.
திருவாரூர் மாவட்டம்.
PIN - 612 804.
*ஆலயத் திறப்பு காலம்:*
இவ்வாலயம் தினந்தோறும் காலை 8.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*பெயர்க் காரணம்:*
குடமுருட்டியாற்றின் கரையில் உள்ள தலம். குடமுருட்டி ஆறு தேவார காலத்தில் கடுவாய் எனப் பெயர் பெற்றிருந்தது. ஊரின் பெயர் புத்தூர். கடுவாய் நதிக்கரையில் இருந்ததால் கடுவாய்க்கரைப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. இந்நாளில் இத்தலம் ஆண்டாங்கோவில் என்ற பெயருடன் அறியப்படுகிறது.
தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரையில் அமைந்துள்ள இத்தலம் தொன்னூற்று ஏழாவது தலமாகப் போற்றப் படுகிறது.
*தொடர்புக்கு:*
91- 4374 265 130
044- 26222888
*கோவில் அமைப்பு:*
நெடுநாளையக் கனவான இவ்வாலயத்து ஈசனைக் கண்டு வணங்கச் செல்லும் வாய்ப்பு சில மாதத்திற்கு முன்தான் அவனருளானது.
எண்ணம் நம்மோடதாயினும் அவனைக் காணும் பேறுகள் அவனருள் செய்தால் மட்டுமே அது நடக்கும்.
ஆலயத்தினை நோக்கிச் செல்கையில், ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சியளித்தது. *சிவ சிவ* என மொழிந்து வணங்கிக் கொண்டோம்.
ஆலயத்திற்கு வெளியே கோவிலின் தீர்த்தம் இருக்க, அவ்விடம் அகழ்ந்து சென்று, தீர்த்தத்தை அள்ளியெடுத்து சிரசிற்கு வார்த்து இறைவனை நினைந்து வணங்கிக் கொண்டோம்.
திரிசூல கங்கை கோயிலின் வலப்புறம் இருக்க கண்டு வணங்கி ஆராதித்து சந்தோஷமானோம்.
கோபுர வாயிலின் இடதுபுறம் சித்தி விநாயகர் அமர்ந்திருந்தார். இவருக்குண்டான வணக்கத்தை வணங்கித் தெரிவித்து நகர்ந்தோம்.
கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தவுடன் நேரே கொடிமரத்தைக் காண நேர்ந்தது.
ஆலயத்தொழுகை அனைத்தையும் முடித்து வெளிவருகையில் கொடிமரத்தின் முன் விழுந்து வணங்கிக் கொள்ளலாமென்று முடிவெடுத்து, நின்றவாறு வணங்கி நகர்ந்தோம்.
அடுத்து, விநாயகர் இருக்க, அவரிடம் ஆலயத்துள் புகுந்து இறைவனை வணங்க அனுமதி கேட்டோம். தனக்கிருக்கும் அதிகாரத்தை நம்மை ஆலயத்துள் புக அனுமதியளித்தார்.
அவரை நன்றியுடன் வணங்கி, தலைக்கும் சில குட்டுக்களை அவருக்காக அளித்துவிட்டு நகர்ந்தோம்.
தொடர்ந்தாற்போல பலிபீடம் இருக்க, இதன் முன்வந்து நின்று, (நம்மிடம் ஆணவமலம் கிடையாது, சில மாதங்களில் பல தலங்களுக்குச் சென்று விட்டு, இருந்த ஆணவமலத்தை ஒழியப் பெற்றிருந்தோம். இருப்பினும் நம்மையும் விடாது ஏதாவது இருக்குமாயின் என எண்ணத்துடன்
பலிபீடத்தின் முன்நின்று, எம்முடனுள்ள ஆணவமலமும், இனி அவ்வாணவமலம் தோன்றாமை இருக்குமாறு அருளவும் வேண்டி வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.
அதற்கடுத்ததாக நந்தி மண்டபத்தில் நந்திபெருமான் அமர்ந்திருந்தார். இவரிடம் ஈசனைத் காணும் அனுமதியை வாங்கி வணங்கிக் கொண்டோம்.
நந்தியாரின் மண்டப தூண்களில் இருந்த அழகிய சிற்ப வேலைப்பாடுகளைக் கண்டு மெய்மறந்து சிலிர்த்துப் போனோம்.
இதற்கடுத்து அநேக தூண்களைக் கொண்ட கருங்கல்லால்லான முன் மண்டபம் அமைந்திருந்தன.
இம்மண்டபத்துள்ளே சென்றோம். சுவாமி கருவறையில் மூலவரான ஈசன் கிழக்கு நோக்கி எழுந்தருளி அருட்காட்சி தந்து கொண்டிருந்தார்.
இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரை மனமுருக பிரார்த்தனை செய்து, ஆனந்தித்து வணங்கிக் கொண்டு கைதொழுது கொண்டோம்.
வருடந்தோறும் சித்திரை 11,12, 13 தேதிகளில் சூரிய ஒளி மூலஸ்தானத்திலுள்ள ஈசன் மீது விழுந்து , சூரியன் பூஜை நடத்துவிக்கிறான்.
கோஷ்டத்தில் வலம்வரும்போது, தட்சிணாமூர்த்தி ஆலால மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் இருபுறமும் இருக்க, முயலகனை காலின் கீழ் மிதித்தவாறு காணப்பட. ஆத்மார்த்தமாக வணங்கிக் கொண்டோம்.
கருவறை சுற்றுப் பிரகாரத்தில் நால்வர் சந்நிதி, பைரவர், சூரியன், நவக்கிரகங்கள் இருக்க தொடர்ச்சியாக ஒவ்வொருவரையும் வணங்கிக் கொண்டோம்.
அம்பாள் சொர்ணாம்பிகை சந்நிதிக்கு வந்தோம். தெற்கு நோக்கி தரிசனம் தந்து அருளிச் கொண்டிருந்தாள்.
அம்பாள் சந்நிதி முன் மண்டபத்தின் மேல் விதானத்தில் பன்னிரண்டு ராசிகளும் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன.
இத்தலத்தின் விநாயகரான *கும்பகர்ண விநாயகரை* அருள்பாலிக்க பவ்யத்தோடு வணங்கி நகர்ந்தோம்.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தல இறைவனை வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும் என்று அங்கிருந்தோர் கூறினர்.
சரியான வயதில் வயதுக்கு வராத பெண் குழந்தைகளை திங்கள் கிழமையில் இத்தலத்திற்கு கூட்டிவநாது தீர்த்தத்தில் நீராடச் செய்து, இறைவனுக்கு விளக்கேற்றி அர்ச்சித்து, இறைவி சொர்ணாம்பிகையையும் வழிபட்டு வந்தால் விரைவில் ருது ஆகிவிடுவார்கள் என்பது இங்குள்ள மக்களின் உண்மையானதொரு நம்பிக்கை.
*ருது தோஷ பரிகாரம்:*
ருது தோஷ பரிகாரம் செய்ய வருபவர்கள், இந்தத் திருத்தலத்தின் எதிரில் உள்ள திரிசூலகங்கை என்ற திருக்குளத்தில் நீராட வேண்டும்.
பிறகு ஏழு எலுமிச்சைப் பழம், ஏழு மஞ்சள் கிழங்கு கொண்டு வந்து ஆலயத்தில் கொடுத்து இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பந்தப்பட்ட பெண்ணின் மடியில் ஒரு மஞ்சள் கிழங்கும், ஒரு எலுமிச்சைப் பழமும் வைத்து பின்னர் இறைவனுக்கும், இறைவிக்கும் அர்ச்சனை செய்வார்கள்.
பின்பு அந்தப் பெண், ஏழு நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து ஏழு திங்கள்கிழமைகள் வழிபாடு செய்து வந்தால், ருது தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
மாதவிலக்குப் பிரச்னை உள்ள பெண்களும் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்து பலன் பெறுகிறார்கள்.
.
*கும்பகர்ணப் பிள்ளையார்:*
கும்பகர்ணனை அம்பிகை வேண்டுகோள்படி இங்கிருந்து வீசி எறிந்த பிள்ளையார் கும்பகர்ணப் பிள்ளையாராகக் காட்சி தருகின்றார்.
*தல அருமை:*
முனிகுமாரரான மயந்தன் என்பவர் தாம் செய்த சிறு தவறுக்காக தந்தை அளித்த சாபத்தின் காரணமாக *’கண்டதேவர்’* என்ற பெயரில் பூவுலகில் மறுபிறவி எடுத்தார்.
முசுகுந்த சக்கரவர்த்தியின் அமைச்சராக இருந்த வந்த கண்டதேவருக்கு சிவபெருமானுக்கு திருக்கோயில் எடுக்கும் ஆவல் எழுந்தது.
அதற்கு பெரும் பொருள் தேவைப்படும் என்பதையும் உணர்ந்த அவர், பெரும்பொருள் செலவிட மன்னரும் சம்மதிக்க மாட்டார் எனினும், அவரும் சிவபக்தராதலால் திருக்கோயிலைக் கட்டி முடித்த பின்னர் மறுக்கவோ தண்டிக்கவோ மாட்டார் என்ற நம்பிக்கையில் அமைச்சர் பதவியை பயன்படுத்தி அழகிய திருக்கோயிலை சிவபெருமானுக்கு எழுப்பினார் கண்ட தேவர்.
கோயிலைக் கட்டிமுடித்தபின் கண்டதேவர் தகவலைத் தெரிவித்தபோது, நேர்மையான அமைச்சர் இவ்வாறு தாம் அறியாமல் பதவியை பயன்படுத்தி கோயில் எழுப்பியது கண்டு வெகுண்டார் மன்னர் முசுகுந்த சக்கரவர்த்தி.
சட்டத்தை மட்டுமே நினைந்த மன்னர் அமைச்சரை சிரச்சேதம் செய்யும்படியும் ஆணையிட்டார்.
கண்ட தேவர் கலங்காமல், ஐந்தெழுத்து மந்திரம் ஓதி பலிக்கட்டையில் தலை வைத்து படுக்க வைக்கப் பட்டார்.
அமைச்சரைக் கொல்ல வாளை ஓங்கினார்கள்..... ஓங்கிய வாள் மாலையாக மாறி அமைச்சர் கழுத்தில் விழுந்தது.
அப்போது வானிலே பல கோடி சூரியப்பிரகாசத்துடன் இடபவாகனத்தில் தரிசனம் தந்தார் சிவபெருமான். கண்டதேவர் சிவபெருமானுடன் ஐக்கியமானார்.
நடந்த தகவலை அறிந்த முசுகுந்த சக்கரவர்த்தி, தாம் செய்த பிழைபொறுக்க வேண்டி இறைவனிடம் அழுது முறையிட்டான்.
அசரீரி வாக்கில் இறைவனுக்குத் திருக்கோயில் எழுப்புதல், சீரமைத்தல், தீபம் ஏற்றுதல் ஆகியவற்றின் புண்ணிய பலன்கள் என்பதை முசுகுந்த சக்கரவர்த்திக்கு உபதேசிக்கப்பெற்றார்.
*வழிபட்டோர்:*
காசிப முனிவர், முசுகுந்த சக்கரவர்த்தி, கண்ட தேவர்,[
அகத்தியர், சூரிய பகவான், சூதமா முனிவர், இந்திராணி, உரோமச மாமுனிவர், பதஞ்சலி முனிவர், அரிச்சந்திர மன்னர் ஆகியோர்.
*திருநாவுக்கரசு தேவாரம்:*
இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள நாவுக்கரசரின் பதிகம் ஐந்தாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. அப்பர் தனது பதிகத்தில் இத்தலத்தை "கடுவாய்க்கரைத் தென்புத்தூர்" என்று குறிப்பிடுகிறார்.
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய திருத்த னைப்புத்தூர் சென்று கண்டுய்ந்தேனே.
யாவ ருமறி தற்கரி யான்றனை மூவ ரின்முத லாகிய மூர்த்தியை நாவின் நல்லுரை யாகிய நாதனைத் தேவனைப் புத்தூர் சென்று கண்டுய்ந்தேனே.
அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே கம்பனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர் நம்பனைக் கண்டு நானுய்யப் பெற்றேனே.
மாத னத்தைமா தேவனை மாறிலாக் கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் காதனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர் நாதனைக் கண்டு நானுய்யப் பெற்றேனே.
குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்டனைக் கடுவாய்க்கரைத் தென்புத்தூர் அண்டனைக் கண்டருவினை யற்றேனே.
பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட மைந்த னைம்மண வாளனை மாமலர்க் கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.
உம்ப ரானை உருத்திர மூர்த்தியை அம்ப ரானை அமலனை ஆதியைக் கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எம்பிரானைக் கண்டு இன்பம தாயிற்றே.
மாசார் பாச மயக்கறு வித்தெனுள் நேச மாகிய நித்த மணாளனைப் பூச நீர்க்கடுவாய்க்கரைத் தென்புத்தூர் ஈச னேயென இன்பம தாயிற்றே.
இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே.
அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட் டிரக்க மாகி அருள்புரி யீசனைத் திரைக்கொள் நீர்க் கடுவாய்க்கரைத் தென்புத்தூர் இருக்கு நாதனைக் காணப்பெற்று உய்ந்தேனே.
*"கடுவாய்க்கரைத் தென்புத்தூரில் இருக்கும் நாதனைக் காணப்பெற்று உய்ந்தேன்"* என்று திருநாவுக்கரசர் இறைவன் தரிசனம் கிடைக்கப் பெற்றதை தனது பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amirthavahini google group.