top of page

சன்யாசம்

#சன்யாசம் ஏற்றுக் கொண்டு தனது உறவினர்களுடன் தன வீட்டிலேயே வசிக்கலாமா?


# சன்யாசம் என்ற சொல்லுக்கே அனைத்தையும் துறந்து விடுதல் என்று தானே பொருள். தனது உற்றார், உறவினர், ஆசை முதலியவற்றை துறந்து வைராக்யத்துடன் ப்ரஹ்மவிசாரம் செய்து மோக்ஷத்தை அடைவதுதான் சன்யாசத்தின் அடையாளம். இது அவரவர்களின் (வைராக்ய) தகுதிக்கேற்ப குடீசகர், பஹூதகர், ஹம்சர், பரமஹம்சர் என்பதாக நான்கு விதமாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. தனது உறவினர்கள் மூலம் அமைக்கப்பட்ட குடிசையில் அல்லது தனது வீட்டில் வசித்துக் கொண்டு காஷாய (சாயக்கலர்) ஆடை உடுத்தி, குடுமி, பூணூல், தண்டத்துடன் தனது உறவினர்களால் அளிக்கப்படும் பிக்ஷையை ஏற்றுக்கொண்டு ஆத்மவிசாரம் செய்பவர் குடீசக யதி (சந்நியாசி) எனப்படுவர். இது மிகவும் அசக்தர்களுக்கான வழி. இரண்டாவதாகக் கூறப்படும் பஹூதகர் என்பவர் தனது ஆசைகளையும் உறவினர்களையும் முற்றிலுமாக விட்டுவிடுவார். மேலும் தினசரி ஏழு வீடுகளுக்குச் சென்று பிக்ஷை எடுத்து காஷாய வஸ்திரம், சிகை, பூணூல் தண்டத்துடன் ஆத்மவிசாரம் செய்து வருபவர். மூன்றாவதாக ஹம்சர் என்பப்படுபவர் முன்சொன்ன பஹூதகரைப் போன்றவரே. இவரும் பூணூல், தண்டம், காஷாய வஸ்திரம் போன்றவற்றை மட்டும் ஏற்றுக் கொண்டு மற்ற அனைத்தையும் துறந்தவர். நான்காவதாகக் கூறப்படும் பரமஹம்சர் என்பவர் பந்த பாசங்கள் உற்றார் உறவினர் ஆசா பாசங்கள் என அனைத்தையும் துறந்து உலகமனைத்திலும் ஊடுருவியிருக்கும் ப்ரஹ்மத்தை அனைத்தையும் ப்ருஹ்ம ஸ்வரூபமாகவே பாவித்து உலக மக்களுக்காக ஒரு சில நடவடிக்கைகளை மட்டும் பற்றற்றவராகச் செய்து கொண்டு ஆத்ம விசாரம் செய்து கொண்டு வாழ்ந்து மற்றவருக்கு தன தூய வாழ்க்கை மூலமாக நல்வழி போதிப்பவர். இவரே மற்ற மூவரைக்காட்டிலும் சிறந்தவர். பொதுவாக சன்யாசிகளுக்கு சிகை, யக்ஞோபவீதம் முதலியன இருந்தாலும் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஆகவேதான் ஸ்ரீ ஆதிசங்கரர் வழிவந்த அத்வைத பரமஹம்ச யதிகள் (சன்யாசிகள்) அனைவரும் சிகை யக்ஞோபவீதம் இல்லாமல் கையில் தண்டத்தை மட்டும் தரித்திருக்கிறார்கள். ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாய த்ரிதண்டீ என்னும் பரமஹம்ச யதிகள் தண்டம் மற்றும் சிகை, யக்ஞோபவீதத்துடன் இருக்கிறார்கள். ஏக (ஒரு தண்டமோ), த்ரி (மூன்று) தண்டமோ, சிகை இருக்கிறதோ, இல்லையோ, காஷாய (காவி) ஆடை உடுத்தியிருக்கும் அனைத்து சன்யாசிகளும் பூஜிக்கத்தக்கவர் தான். இதில் சம்சயமில்லை என்கிறார் மகாபாரதம் அச்வமேதபர்வாவில் ஸ்ரீ க்ருஷ்ணர் தர்மபுத்ரரிடம்.

61 views0 comments
bottom of page