Anugraha Bhashanam by Jagadguru Sri Kanchi Sankaracharya at Sama Sree Ayyappan Temple, Vadodara -1st November 2026
வடோதரா, சாமா ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவில் அநுக்ரஹ பாஷணம்
அனுக்ரஹ பாஷணச் சிறப்பம்சங்கள் - 1 நவம்பர் 2026
1. நிர்மாணம், நிர்வாகம், நியமங்கள்
சாமா ஐயப்பன் திருக்கோவிலில் “நிர்மாணம், நிர்வாகம், நியமங்கள்” ஆகிய மூன்றும் இணைந்து சிறப்பாக நடைபெறுவதைப் பூஜ்யஶ்ரீ பெரியவா பாராட்டினார்கள். ஸம்ஸ்க்ருதத்திற்கு மிகவும் நெருக்கமான மலையாள மொழியைக் கேட்பதிலும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.
2. “பரமாவதி ப்ரயோஜனம்” — ஆதிசங்கரர் காட்டிய வழி
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பூரணமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்னும் “பரமாவதி ப்ரயோஜனம்” என்ற கருத்துடன், சிறுவயதிலேயே பிறருடைய துன்பத்தை உணர்ந்து கனகதாரா ஸ்தோத்ரம் அருளிய ஆதிசங்கரரைப் பூஜனீயர்கள் நினைவுகூர்ந்தார்கள். அரசாங்கமோ அதிகாரமோ நடத்தாமல், ஞானம், சஞ்சாரம், உபதேசம், தவம், பக்தி ஆகியவற்றால் பாரதத்தின் பல்வேறு க்ஷேத்ரங்களை இணைத்து, தர்மப்ரசாரம் செய்த மகானின் பணியை எடுத்துரைத்தார்கள்.
3. மூர்த்தி பூஜையும் முத்ரைகளின் பொருளும்
பல்வேறு கட்டடப் பாணிகளில் அமைந்த கோவில்களுக்கும் மூர்த்தி வழிபாட்டிற்கும் ஆதாரமான தர்மப்ரசாரத்தை ஆதிசங்கரர் செய்ததைப் பூஜ்யஶ்ரீ பெரியவா விளக்கினார்கள். இத்திருக்கோவிலின் பல்வேறு சந்நிதிகளைக் குறிப்பிட்டு, தந்த்ர வித்யையையும் எடுத்துரைத்தார்கள். “முதம் கரோதி தேவானாம் ரிபூன் த்ராவயதே க்ஷணாத்” என்பதற்கேற்ப, முத்ரைகள் தேவதைகளுக்கு மகிழ்ச்சியளித்து, தவத்திற்கும் அபிவிருத்திக்கும் ஏற்படும் விக்னங்களை அகற்றுவதற்குச் சங்கேதமாக இருப்பதாகத் தெரிவித்தார்கள்.
4. ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் பூஜா விதானப் பணிகள்
கேரளச் சஞ்சாரத்தின்போது தந்த்ர வித்யாபீடத்திற்கு வசதிகள் செய்து கொடுத்து, அர்ச்சகர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்குதல் உள்ளிட்ட முயற்சிகளால் பூஜா விதானம் பிரபலமடைய ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆற்றிய பணிகளைப் பூஜனீயர்கள் நினைவுகூர்ந்தார்கள். சபரிமலை சந்நிதானத்தின் தீபத்திலிருந்து ஜோதியை எடுத்துவந்து, “ஐயப்பஸ்வாமி ஜோதி யாத்ரா” மூலம் கிராமம் கிராமமாக அனைவருக்கும் தரிசனம் கிடைக்கச் செய்ததை, “தர்சனம் — ப்ரதர்சனம்” என்ற சொற்றொடருடன் குறிப்பிட்டார்கள்.
5. கேரளத்தின் தர்மப்ரசாரமும் “தேவ பூஜா” திட்டமும்
பரசுராம க்ஷேத்ரமான கேரளத்தில் நடைபெறும் கோஸம்ரக்ஷணம், வேதப்ரசாரம், பல நூற்றாண்டுகளாக இயங்கும் வேதபாடசாலைகள் ஆகியவற்றைப் பூஜ்யஶ்ரீ பெரியவா எடுத்துரைத்தார்கள். கிராமக் கோவில்களில் பூஜை செய்யும் நம்பூதிரிமார்களின் யோகக்ஷேமத்திற்காக மூவாயிரம் ரூபாய் உதவி அளிக்கும் “தேவ பூஜா” திட்டத்தையும் குறிப்பிட்டார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் பூஜைகள் நடைபெற, பாரதத்திலும் வெளிநாடுகளிலும் வாழும் பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள்.
6. சம்ப்ரதாயத்திற்கேற்ப மாணிக்யமங்கலத்தில் ஆச்ரமம்
காஞ்சி சங்கராசார்ய ஸ்வாமிகள் காலடியில் தரிசனம் செய்துவிட்டு, இரவு தங்குவதற்கும் பிக்ஷைக்கும் வேறு ஊரை நாடும் சம்ப்ரதாயத்தைப் பூஜனீயர்கள் விளக்கினார்கள். அதற்கேற்ப, காலடிக்கு அருகிலுள்ள மாணிக்யமங்கலத்தில் காஞ்சி பீட ஆச்ரமம் அமைக்க நிலம் வாங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்கள்.
7. ஸௌந்தர்யலஹரி யந்த்ர பூஜையும் பரோடாவின் தொடர்பும்
ஸௌந்தர்யலஹரியின் நூறு யந்த்ரங்களைத் தயாரிப்பதற்கான நூல் அக்காலத்தில் பரோடா நூலகத்திலிருந்து கிடைத்ததைப் பூஜ்யஶ்ரீ பெரியவா குறிப்பிட்டார்கள். 1976 காஞ்சி காமாக்ஷி அம்பாள் கும்பாபிஷேகச் சமயத்தில், ஶ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசியுடன் ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் வ்யாக்யானத்துடனும் யந்த்ரங்களுடனும் நூலை வெளியிட்டதை நினைவுகூர்ந்தார்கள். தற்போது தயாரிக்கப்பட்டுள்ள நூறு யந்த்ரங்களுடன், உரிய நைவேத்யங்கள் மற்றும் ப்ரார்த்தனைகளோடு இத்திருக்கோவிலிலும் பூஜை நடத்த ஏற்பாடு செய்யுமாறு அறிவுறுத்தினார்கள்.
8. கோவிலுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட திருக்குளங்கள்
கேரளத்தில் கோவில்களைப் போலவே குளங்களும் தீர்த்தங்களும் முக்கியமானவை என்று பூஜனீயர்கள் வலியுறுத்தினார்கள். அவற்றைச் சுத்தப்படுத்தி, பெண்களுக்கும் ஆண்களுக்கும் உரிய படித்துறைகள் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் முயற்சிகளை எடுத்துரைத்தார்கள். குளங்களைப் பற்றிய திட்டமிடலுடன் “Think tank” என்ற சொற்றொடரையும் இணைத்துக் கூறினார்கள்.
9. அடுத்த தலைமுறைக்குச் சம்ப்ரதாயங்களைக் கொண்டு செல்லுதல்
குழந்தைகளுக்கு “பஜ கோவிந்தம்”, “கணேச பஞ்சரத்னம்” ஆகியவற்றைக் கற்பிக்க வேண்டும் என்று பூஜ்யஶ்ரீ பெரியவா அறிவுறுத்தினார்கள். தீபம், துளசி, புஷ்பாஞ்சலி, சந்தனம், நாமஸங்கீர்த்தனம், வழிபாடு ஆகியவை சிறப்பாக நடைபெற்று, இத்திருக்கோவில் தர்மத்திற்கும் சம்ப்ரதாயத்திற்கும் பரம்பரைக்கும் அனுகூலமாக விளங்க வேண்டும் என்று தெரிவித்தார்கள். “சாஸ்தார மீடே சகலார்த்த ஸித்யை” என்று ப்ரார்த்தித்து, அனைவரும் சுபிக்ஷமாகவும் பத்திரமாகவும் வாழ, ஜகத்குரு ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் வருகை தந்த அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள்.
Comments