ARUNAGIRI ULAA- BOOK REVIEW
- AruL Amudham
- 3 days ago
- 1 min read

காஞ்சிப் பெரியவரின் அருளாணைக்கிணங்க
எழுதப்பட்ட 'அருணகிரி உலா' நூல் அறிமுகம்.
எழுதியவர்:திருமதி சரண்யா விஸ்வநாத்
சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை
சுப்பிரமணியனை விஞ்சிய தெய்வமில்லை
என்பது பழமொழி.
"ஏழ்தலம் புகழ் காவேரி" என்பது அருணகிரிநாதர் வாக்கு.
அப்படிப்பட்ட காவேரி நதியால் வளம் பெறுவது சோழ நாடு.
"சோழ மண்டல மீதே மனோகர"மாய் சுப்பிரமணியன் வீற்றருளும் பல தலங்களை "சித்ர கவித்துவ சத்த மிகுத்த திருப்புகழ்ப்" பாக்களால் போற்றியவர் அருணகிரியார். திருப்புகழின் துணையோடு நம்மை, திருப்புகழ்த் தலங்களுக்கு அழைத்துச் செல்கிறது திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள் எழுதிய 'அருணகிரி உலா' என்னும் இந்நூல்.
திருவண்ணாமலையில் முருகப் பெருமானால் ஆட்கொள்ளப்பட்டு, அவர் எடுத்துக் கொடுத்த 'முத்து' என்ற சொல்லை வைத்து முத்தைத்தரு எனத் தொடங்கும் பாடலைப் பாடினார் அருணகிரிநாதர். பின்னர் பலகாலம் தியானத்தில் அமர்ந்த அருணகிரியாரை, "வயலூருக்கு வா" என்று முருகப் பெருமான் ஆணையிட, அப்போது தொடங்கியது தல யாத்திரை. பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள முருகப்பெருமானை நற்றமிழால் பாடி மேன்மைத் திருப்புகழை நமக்கு அளித்தார்.
திருமதி சித்ரா மூர்த்தி அவர்கள், 'அருணகிரி உலா' என்னும் இந்நூலில், அருணகிரிநாதரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, காவிரி பாயும் சோழ நாட்டிலுள்ள திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள திருத்தலங்களுக்கு நம்மை அழகாக அழைத்துச் செல்கிறார்.
இந்நூல் நமக்குக் காட்டிக்கொடுக்கும் திருப்புகழ் திருத்தலங்கள் மொத்தம் 63.
ஒவ்வொரு தலத்திலும் அவற்றின் வரலாறு, கட்டமைப்பு, அங்கு நடக்கும் திருவிழாக்கள், அக்கோயிலின் தீர்த்தம் - மூர்த்தி - விருக்ஷ சிறப்புகள், நாயன்மார்கள், பக்தர்களுடன் உள்ள தொடர்பு என பல கோணங்களிலும் ஆராய்ந்து நமக்கு ஆரமுதாய் அளித்துள்ளார்.
கோயிலின் உள்ளே நுழைந்து பிராகாரங்களை வலம் வருதல், தெய்வங்களின் வடிவ வர்ணனைகளை அளித்தல், அத்தலத்திற்குரிய திருப்புகழை அர்த்தத்துடன் சமர்ப்பித்தல் என ஒவ்வொன்றையும் நுணுக்கமான முறையில் எளிய நடையில் எழுதியுள்ளார்.
இந்நூலில் எழுதப்பட்டுள்ள ஒவ்வொரு கோயிலையும் படித்து முடிக்கையில், நம் மனக்கண் முன் அந்த விவரங்கள் அனைத்தும் விரிந்து ஆனந்தம் அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆலயங்களை நேரில் சென்று தரிசித்து வந்த நிறைவு நம்மிடம் நிறையும்.
முருகன் அடியார்களுக்கு முற்றாப் பேரின்பம் நல்கும் புத்தமிர்தம் இந்நூல். சோழ நாட்டின் ஆலயச் சிறப்புகளை அறிய விரும்பும் ஆர்வலர்கள், அவற்றை அனுபவித்த அடியார்கள் என அனைவருக்கும் நல்லதொரு அனுபவத்தை அளிக்கவல்ல அற்புத நூல் 'அருணகிரி உலா'.
திருமதி சித்ரா மூர்த்தி அவர்களின் பேருழைப்பால் எழுதப்பட்டதும், சூரியன் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டதுமான 'அருணகிரி உலா' எனும் இந்நூல், நம் அனைவரின் கைகளிலும் அவசியம் இருக்கவேண்டிய ஒரு தலைசிறந்த திருப்புகழ் ஸ்தல வழிகாட்டி ஆகும்.
இனி புத்தகத்தின் ஒரு பகுதியைப் பார்ப்போம்
ஆசிரியரின் மற்ற நூல்கள்
Comments