top of page

மன்னார்குடி ஊர் இல்லை, அது ஒரு வாழ்க்கை!

நான் வளர்ந்த ஊர் மன்னார்குடி ஊர் இல்லை, அது ஒரு வாழ்க்கை! - விகடனில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இதே தேதியில் (29.06.2011) வெளியான நம் மன்னையைப் பற்றிய கட்டுரை.


''பெருமைக்காகச் சொல்லலை. இந்தியாவின் சிறப்புமிக்க ஊர்களில் ஒண்ணு, எங்க மன்னார்குடி!'' - பெருமிதத் துடன் தொடங்கினார் 'காவிரி’ எஸ்.ரங்க நாதன்.


''இந்தியாவிலேயே நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒண்ணு மன்னார்குடி. பாமணி ஆறு ஒரு தாயோட கைபோல அரவணைச்சு இருக்க, மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட தெருக்கள், வடக்கில் இருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட வீதிகள்னு கச்சிதமா அமைக்கப்பட்ட ஊர்.


'மன்னார்குடி மதில் அழகு’ன்னு சொல்வாங்க. ஒட்டுமொத்த ஊருமே அழகுதான். அதனால்தான், 1866-லேயே எங்க ஊரை நகராட்சியா அறிவிச்சுட்டான் வெள்ளைக்காரன்.


அந்தக் காலத்தில் மன்னார்குடியோட பரப்பளவு வெறும் ஆறு சதுர கி.மீ-தான். ஆனா, இந்தச் சின்ன ஊரில், திரும்பின பக்கம் எல்லாம் குளங்கள். மொத்தம் 98 குளங்கள் இருந்தது. கற்பனை பண்ணிப் பாருங்க. எவ்வளவு அழகா இருந்து இருக்கும்னு! அத்தனைக் குளங்களையும் ஒண்ணோடு ஒண்ணு இணைச்சு இருந்தாங்க. குளத்துக்குத் தண்ணீர், வடுவூர் ஏரியில் இருந்து வரும். 15 கி.மீ. நீளம், 100 அடி அகல வாய்க்கால் வெட்டி, அதை மன்னார்குடி நகராட்சி பராமரிச்சது. ஊரோட பெரிய குளமான ஹரித்ரா நதி, நாட்டிலேயே பெரிய குளங்களில் ஒண்ணு. 1,158 அடி நீளம், 847 அடி அகலம், 22.516 ஏக்கர் பரப்புடைய அதைக் காவிரியோட மகள்னு சொல்வாங்க!


எங்க ஊரோட அடையாளம், ராஜகோபால சுவாமி கோயில். ஆயிரம் வருஷப் பாரம்பரியம்கொண்டது. சோழர்களால் கட்டப்பட்டது. வருஷம் முழுக்க பெருமாள் விசேஷமா இருக்கும் கோயில். பங்குனி மாசத்தில் இங்கே நடக்கும் 18 நாள் திருவிழா, சுத்துப்பட்டு ஊர் மக்கள் அவ்வளவு பேரும் கூடுற ஒரே வைபவம்!


மன்னார்குடியோட ஜீவாதாரம்... விவசாயம். இந்த மண்ணைச் செழிக்கவைக்கிற அதே காவிரிதான் மன்னார் குடிக்குனு ஒரு தனிக் கலாசாரத்தையும் செழிக்கவைக்குது. அரசியலா இருந்தாலும் சரி; வெளிநாட்டுக்கே போனாலும் சரி; மன்னார்குடிக்காரங்க ஊர் விஷயத்தில் ஒற்றுமையா இருப்பாங்க. மன்னார்குடியோட வரலாற்றில் மறக்கவே முடியாத மூன்று அரசியல்வாதிகள், கோபால்சாமி தென்கொண்டார், மன்னை நாராயணசாமி, சுவாமிநாத கொத்தனார். கோபால்சாமி காங்கிரஸ்காரர், நாரயணசாமியோ தி.மு.க-காரர். ஆனா, அந்த வேறுபாட்டை ஊர் விஷயத்தில் என்னைக்கும் அவங்ககிட்ட பார்க்க முடியாது. கோபால்சாமி எதை எல்லாம் இந்த ஊருக்குக் கொண்டுவரணும்னு நினைச்சாரோ, அதை எல்லாம் கொண்டுவந்தவர் நாராயணசாமி. மன்னார்குடியில், கூட்டுறவு ஸ்தாபனங்களை வலுவா உருவாக்கியதில் இவங்க பங்களிப்பு மகத்தானது. அதேபோல, சுவாமிநாதன் காலத்தில்தான் நாட்டுக்கே முன்மாதிரியா 'கூட்டுறவு பால் சங்கம்’ இங்கே உருவானது.


ஊர் வளர்ச்சியில் எங்க ஊர்க்காரங்களுக்கு உள்ள அக்கறைக்கு உதாரணமா ரெண்டு விஷயங்களைச் சொல்லலாம். ஒண்ணு, நூற்றாண்டைக் கடந்த கோட்டூர் அரங்கசாமி முதலியார் அறக்கட்டளை நடத்தும் நூலகம், புலவர் - வேத மன்றங்கள். இன்னொண்ணு, நாட்டிலேயே முதல்முறையா எஸ்.வி. கனகசபை பிள்ளையால் மாட்டு வண்டியில தோற்றுவிக்கப்பட்ட நடமாடும் நூலகம். இந்தப் பகுதியோட அறிவு வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிப்பவை. அந்த அக்கறை இன்னைக்கும் தொடருது. ராஜகோபால சுவாமி கோயிலுக்குஇணையாப் பழமையான கோயிலான ஜெயங்கொண்ட நாதர் கோயில் கிட்டத்தட்ட அழிஞ்சுடுச்சு. பழமையான திருவிழாக்களில் ஒண்ணான ஆருத்ரா தரிசனமும் வழக்கொழிஞ்சுபோச்சு. இப்ப திவாகரன் அது ரெண்டையும் மீட்டுக்கொண்டு வந்திருக்கார்.


கலையும் மேதமையும் செழிச்ச பூமி இது. எழுத்துக்குக் கரிச்சான்குஞ்சு, நாகஸ்வரத்துக்கு சின்ன பக்கிரி, தவிலுக்கு ராஜகோபால் பிள்ளை, கொன்னக் கோலுக்கு நடேசப் பிள்ளை, கோட்டுவாத்தியத்துக்கு சாவித்திரி அம்மாள், நடிப்புக்கு மனோரமானு மன்னார்குடிக் கலைஞர்களைச் சொல்லிக்கிட்டே போகலாம். தி.ஜானகிராமன் ஊர் மன்னார்குடியை ஓட்டியுள்ள தேவங்குடி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 'பாரத ரத்னா’வுக்கு இணையா மதிக்கப்பட்ட 'மஹா மஹோபாத்யாய’ பட்டம் வாங்கிய வேத குரு ராஜு சாஸ்திரிகள், மன்னார்குடி மண்ணின் மைந்தர்!


அதேபோல, கல்வியிலும் சிறந்த ஊர் மன்னார் குடி. கிட்டத்தட்ட 150 வருஷ பாரம்பரியம்மிக்க பின்லே பள்ளி, நூற்றாண்டு கண்ட தேசியப் பள்ளி, பெண் கல்வியில் சிறந்த புனித வளனார் பள்ளி மூன்று பள்ளிக்கூடங்களும் இன்னைக்கும் இந்த மாவட்டத்தின் சிறந்த பள்ளிகள்!


நகரத்தோட மையப் பகுதியான பந்தலடிதான் ஊரின் கடை வீதி. சகலமும் கிடைக்கும் இடம். அங்கே கிடைக்கத் தவறுவதை, செவ்வாய்க் கிழமைகள்ல கூடும் வாரச் சந்தையில் வாங்கலாம். நாடகங்கள் நடந்த காலத்தில் 'பத்மா கொட்டகை’ எங்களோட பொழுதுபோக்கு. சினிமா வந்த பிறகு, பல டாக்கீஸ்கள் வந்துச்சு. நிலைச்சது சாந்தி தியேட்டரும் சாமி தியேட்டரும்தான்.


மன்னார்குடியோட முக்கியமான இன்னொரு சுவாரஸ்யம், சாப்பாடு. 'டெல்லி ஸ்வீட்ஸ்’ல அல்வா - மணி காரபூந்தி, உடுப்பி ஹோட்டல்ல ரவா தோசை - காபி, குஞ்சான் கடை பக்கோடா - வடை, கிருஷ்ணா பேக்கரி இனிப்பு பப்ஸ், அஞ்சாம் நம்பர் கடை லஸ்ஸி, நேதாஜி கடை டீ... என்று மன்னார்குடி ஸ்பெஷல்னு ஒரு பெரிய பட்டியலே உண்டு. அசைவப் பிரியர்கள் மாமா கடை பிரியாணியையும் அன்வர் கடை புரோட்டாவையும் இதில் சேர்த்துக்கலாம்.


எவ்வளவோ ஊர்களுக்குப் போய் இருப்பீங்க. என்னென்னவோ பார்த்து இருப்பீங்க. எங்க ஊர் தேரடியில் புறப்பட்டு பந்தலடி வரைக்கும் கடை வீதியில் ஒரு நடை காலாற நடந்து பாருங்க... மன்னார்குடி ஊர் இல்லைய்யா, அது ஒரு வாழ்க்கை!''


Courtesy: Sri Sethuraman - Bangalore (Native of Mannargudi)

72 views0 comments

Recent Posts

See All

Shri Rama Navami Utsavam @ Nanganallur 2024

With the blessings of PujyaSri Periyava , Shri Rama Navami utsavam was organised yesterday (21 Apr 2024) by Sriram samartha seva Sangam at Nanganallur. The programme began with parayanam of selected s

bottom of page