Shankara Eye Hospital Anand, Gujarat Anugraha Bashanam highlights
குஜராத் மாநிலம் ஆனந்தில் உள்ள ஶங்கரா கண் மருத்துவமனையில் பூஜ்யஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகளின் அனுக்ரஹ பாஷணம் - சிறப்பம்சங்கள்
2/11/2026
1. குருவருளால் தொடங்கி நாடெங்கும் விரிவடைந்த கண் மருத்துவச் சேவை
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பூஜ்யஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் கோயம்புத்தூருக்கு விஜயம் செய்தபோது, டாக்டர் ரமணி, அவரது மனைவி ராதா ரமணி ஆகியோரின் முயற்சியால் காமாக்ஷி ஆலயத்தில் சிறிய அளவில் இலவச மருத்துவச் சேவை தொடங்கப்பட்டது. இன்று கோயம்புத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களிலும் தென்மாநிலங்களிலும் 14 கண் மருத்துவமனைகள் செயல்பட்டு வருவதைப் பூஜ்யஶ்ரீ பெரியவா நினைவுகூர்ந்தார்கள்.
2. காஞ்சிபுரத்தில் உருவான சங்கல்பம் - குஜராத்தில் நிறைவேற்றம்
நரேந்திர மோடி அவர்கள் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது, காஞ்சிபுரத்தில் காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் நடைபெற்ற உலக சாந்தி யக்ஞம், அதிருத்ரம், ஸஹஸ்ர சண்டி ஹோமம் ஆகியவற்றின்போது மடத்திற்கு வந்திருந்தார்கள். அப்போது குஜராத்திலும் ஶங்கரா கண் மருத்துவமனை அமைப்பது குறித்த உரையாடல் நடைபெற்றது. உடனடியாக முதலமைச்சர் அலுவலகம் மூலம் ஏற்பாடு செய்து, டாக்டர் ரமணியை வரவழைத்து மருத்துவமனை பற்றிய விவரங்களைக் கேட்டறிந்த பின்னர், ஆனந்தில் நிலம் ஒதுக்கியதைப் பூஜ்யஶ்ரீ பெரியவா எடுத்துரைத்தார்கள்.
3. காசியிலிருந்து பாட்னா வரை தொடரும் சேவை விரிவாக்கம்
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வாரணாசியில் ஶங்கரா கண் மருத்துவமனை தொடங்கப்பட்டபோது பிரதமர் நரேந்திர மோடி அவர்களும் கலந்துகொண்டார்கள். அங்கு உரையாற்றியபோது குஜராத்தில் தொடங்கிய இம்முயற்சியையும், அரசியலுக்கு வருவதற்கு முன்பு குஜராத்திலிருந்து பீகாருக்கு மருத்துவ உதவி வழங்கிய அனுபவங்களையும் நினைவுகூர்ந்தார்கள். தொடர்ந்து நிதீஷ் குமார் ஆட்சியில் பாட்னா தலைமைச் செயலகத்திற்கு எதிரே குத்தகைக்கு நிலம் ஒதுக்கப்பட்டு, பூமிபூஜை முடிந்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அங்கும் விரைவில் மருத்துவமனை தொடங்கப்படும் என்றும் பூஜ்யஶ்ரீ பெரியவா தெரிவித்தார்கள்.
4. மாநில எல்லைகளைக் கடந்து கிராமப்புற மக்களுக்குப் பயன்படும் சேவை
வாரணாசி மருத்துவமனை காசியைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது. குஜராத்திலுள்ள மருத்துவமனை குஜராத்தின் ஒன்பது மாவட்டங்களுக்கும் மகாராஷ்டிரத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் என 12 மாவட்ட மக்களுக்குச் சேவை வழங்குகிறது. மகாராஷ்டிரத்தின் பன்வேலிலும் மருத்துவமனை உள்ளது. மரத்தின் நிழல் பலருக்குப் பயன்படுவதுபோல, வடக்கு, தெற்கு, மேற்கு இந்தியாவில் லட்சக்கணக்கான மக்களுக்கு, குறிப்பாகக் கிராமப்புற மக்களுக்கு, இச்சேவை பெரும்பாலும் இலவசமாகக் கிடைப்பதைப் பரம பூஜனீய ஸ்வாமிகள் எடுத்துரைத்தார்கள்.
5. வேறுபாடற்ற சிகிச்சை, தரம், அர்ப்பணிப்புடன் செயல்படும் மருத்துவக் குழு
செலவு செய்ய இயலாதவர்களுக்கு இலவசமாகவும், பொருளாதார வசதியுள்ளவர்களுக்கும் எவ்வித வேறுபாடுமின்றி ஒரே தரத்திலும் சிகிச்சை வழங்கப்படுகிறது. சிகிச்சைக்குப் பிறகும் சில மாதங்கள் நோயாளிகளின் முன்னேற்றத்தைக் கண்காணித்து, தேவைப்பட்டால் மீண்டும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மருத்துவர்களும் நிர்வாகத்தினரும் ஒரு குழுவாக நேர்மை, அர்ப்பணிப்பு, தொழில்முறைத் திறன் ஆகியவற்றுடன் பொதுமக்களுக்குச் சேவை செய்வதைப் பூஜ்யஶ்ரீ பெரியவா பாராட்டினார்கள்.
6. சேவைக்கான அங்கீகாரமும் மேலும் விரிவடைய வேண்டிய சங்கல்பமும்
டாக்டர் ரமணி அவர்களின் சிறப்பான சேவைக்காக இந்திய அரசு பத்மஶ்ரீ விருது வழங்கியிருப்பது, இத்தகைய பணிகளுக்கு அரசாங்கம் அளிக்கும் ஊக்கத்தின் நல்ல அறிகுறியாகும். பொன்விழா ஆண்டையொட்டி மேலும் பல மாநிலங்களில் இச்சேவை விரிவடையவும், பொதுமக்கள், அரசாங்கம், பக்தர்கள் ஆகியோரின் உதவி கிடைக்கவும் பகவானிடம் பிரார்த்திப்பதாகப் பூஜ்யஶ்ரீ பெரியவா தெரிவித்தார்கள்.
7. ஆனந்தில் பாலும் மருத்துவமும் - மக்கள் நலனுக்கான இரு சேவைகள்
ஆனந்தில் ஒருபுறம் பால் மூலமாகவும் மறுபுறம் மருத்துவம் மூலமாகவும் மக்களுக்கு நன்மை கிடைத்து வருவதை ஶ்ரீ பெரியவா குறிப்பிட்டார்கள். ஆனந்த் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், தொழில் மற்றும் விவசாயத் துறைகளுடன் தொடர்புடையவருமான மிதேஷ்பாய் படேல் அவர்கள் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்றும், அவ்வப்போது மருத்துவமனையைப் பார்வையிட்டு உள்ளூர் ஏற்பாடுகளுக்கு ஒத்துழைத்து வருவதாகவும் தெரிவித்தார்கள்.
8. காஞ்சியில் தொடங்கிய சங்கல்பத்தை நேரில் காணும் நல்வாய்ப்பு
ஆனந்திலிருந்து ஆயுர்வேதம் தொடர்பான இடத்திற்கும், துவாரகா சங்கராச்சாரியார் ஆசிரமத்திற்கும், அகமதாபாத்திற்கும் செல்ல வேண்டியிருந்ததால் குறைந்த நேரமே தங்க முடிந்ததாகக் கூறிய பூஜ்யஶ்ரீ பெரியவா, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற உரையாடலால் தொடங்கிய திட்டத்தை நேரில் காணும் நல்வாய்ப்பு கிடைத்ததாகத் தெரிவித்தார்கள்.
ஶங்கரா கண் மருத்துவமனைக் குழுவினர், மருத்துவர்கள், நன்கொடையாளர்கள், பயனாளிகள் மற்றும் இச்சேவையில் பங்கேற்கும் அனைவருக்கும் பகவான் ஶ்ரீ சந்திரமௌலீஸ்வரரின் அருளால் மங்களம் உண்டாகப் பிரார்த்தித்து, ஜகத்குரு ஶ்ரீ காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்வாமிகள் அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள்.
Comments